கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேரை, திமுகவினர் தாக்கியதில், காயமடைந்த அவர்கள், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் ஒருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கிருஷ்ணராயபுரத்திற்கு உட்பட்ட கே.பி.குளம் பகுதிகளில், கரூர் அதிமுக வேட்பாளர் தம்பிதுரையை ஆதரித்து, இரு தினங்களுக்கு முன்பு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக அங்கு வந்த தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியனை வரவேற்பதற்காக, அப்பகுதியை சேர்ந்த அதிமுக கிளை செயலாளர் செல்வராஜ் முன்னேற்பாடுகளை செய்து வந்துள்ளார்.
அப்போது அங்கு வந்த திமுகவை சேர்ந்த 6 பேர், செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினரை, தகாத வார்த்தைகளால் திட்டி, தாக்குதல் நடத்தினர். இதில் செல்வராஜ் மற்றும் அவரது குடும்பத்தினர் காயமடைந்து, கரூர் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். செல்வராஜின் அண்ணி சின்னபொண்ணு சுயநினைவை இழந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கு காரணமான திமுகவைச் சேர்ந்தவர்களில், இருவர், தங்களை தாங்களே பிளேடால் கிழித்துக்கொண்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துள்ளனர். மீதமுள்ள நான்குபேர் தலைமறைவாக உள்ளனர். இதுகுறித்து செல்வராஜ் குடும்பத்தினர் மாயனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.