வேலூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் துரைமுருகனின் மகன், கதிர் ஆனந்தின் தோல்வி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டதால், துரைமுருகன் தரப்பு கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வேலூர் மக்களவை தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கட்சியின் சீனியர் தலைவர்கள் பலர் ஆர்வம் காட்டிய நிலையில் அவர்களை ஓரம்கட்டிய துரைமுருகன் தனது மகன் கதிர் ஆனந்திற்கு, தந்திரமாக சீட் பெற்றார். கருணாநிதி இல்லாததால், துரைமுருகனை பகைத்துக் கொள்ள முடியாமல், அவரது மகனுக்கு சீட் வழங்கினார் மு.க.ஸ்டாலின். ஆனால் இந்த விவகாரம் தற்போது திமுகவினரிடம் நீறு பூத்த நெருப்பமாக புகைந்து கொண்டு வருகிறது. இதனால் மூத்த திமுக தலைவர்கள் பலர் தேர்தல் வேலைகளில் ஆர்வம் காட்டவில்லை என்றும் பண விநியோகத்தின் அடிப்படையில் சிலர் கட்சி பணியாற்றி வருதாகவும் கூறப்படுகிறது.
இது ஒரு புறம் இருக்க, வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் அதிமுக கூட்டணி வேட்பாளரின் வெற்றி இப்போதே உறுதி செய்யப்பட்டு விட்டதால், அதிமுக தரப்பு உற்சாகத்தில் உள்ளது. கடந்த முறை வேலூர் மக்களவைத் தொகுதியில், அதிமுக வேட்பாளர் செங்குட்டுவன் சுமார் 3 லட்சத்து, 83 ஆயிரம் வாக்குகளும், இரண்டாம் இடம் பெற்ற புதிய நீதிக் கட்சி வேட்பாளர் ஏ.சி. சண்முகம் 3 லட்சத்து 24 ஆயிரம் வாக்குகளும் பெற்றனர். வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் இதன் கூட்டுத் தொகை சுமார் 73 விழுக்காடு ஆகும்.
திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட அப்துல் ரஹ்மான், சுமார் 2 லட்சத்து 5 ஆயிரம் வாக்குகளும் காங்கிரஸ் வேட்பாளர் விஜய் இளஞ்செழியன் 21 ஆயிரத்து 650 வாக்குகள் மட்டுமே பெற்றனர். திமுக மற்றும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் கூட்டுத் தொகை 23 விழுக்காடு மட்டுமே ஆகும்.
கடந்த முறை பா.ஜ.க. கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளில் மதிமுக மட்டும் தற்போது இடம் பெறவில்லை. அதே நேரம் கூடுதலாக தமாகா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. எனவே வாக்கு சதவீதத்தில் சிறிய மாறுதல் ஏற்படலாமே தவிர, குறைய வாய்ப்பில்லை.
திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் இடையே உள்ள வாக்கு சதவீத வித்தியாசம் என்பது, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் என்பதால், அதிமுக முகாமில் இப்போதே உற்சாகம் பொங்கி வருகிறது.
இது ஒருபுறம் இருக்க வேலூர் மக்களவை தொகுதி சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் தொகுதி என்பதால், தொடர்ந்து கூட்டணி கட்சியான இந்திய யூனியன் முஸ்லீம் கட்சிற்கே அந்த தொகுதியை கருணாநிதி ஒதுக்கி வந்தார். ஆனால் இந்த முறை மு.க.ஸ்டாலினை நிர்பந்தித்து, அந்த தொகுதியை முஸ்லீம் லீக் கட்சிக்கு ஒதுக்கக் கூடாது என மிரட்டி, தனது மகனுக்கு துரைமுருகன் வாங்கியதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன் காரணமாக சிறுபான்மையினர் இந்த முறையும், திமுகவிற்கு வாக்களிக்க மாட்டார்கள் என தெரிகிறது. இத்தகைய களச் சூழல்களால், துரைமுருகன் தரப்பு கடும் அதிர்ச்சியில் உள்ளதாக கூறப்படுகிறது.