துரைமுருகன் வீடு மற்றும் நிறுவனங்களில் கைப்பற்றப்பட்ட பணம் குறித்து வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வேலூரில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகனின் வீடு, கல்லூரி மற்றும் நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதேபோன்று அவரது உதவியாளர் பூஞ்சை சீனிவாசன் மற்றும் அவரது சகோதரி விஜயாவின் வீடு மற்றும் சிமெண்ட் கிடங்கில் சோதனை நடத்தப்பட்டது. அதன்படி, 11 கோடியே 53 லட்சம் ரூபாய் மூட்டை, மூட்டையாக பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில், கைப்பற்றப்பட்ட பணம் தேர்தல் சொத்து விபர மதிப்பில் இருப்பதை விட, அதிகமாக இருப்பதாக, வருமான வரித்துறை தேர்தல் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பித்தது. அதனடிப்படையில் தேர்தல் ஆணையம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இவ்விவகாரத்தில் வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு உரிய நடவடிக்கை எடுக்கும்படி, உத்தரவு பிறப்பித்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
இதனிடையே துரைமுருகனின் மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்த் மீது காட்பாடி காவல் நிலையத்தில், தேர்தல் செலவின அலுவலர் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். தேர்தலில் போட்டியிட தாக்கல் செய்த மனுவில் குறிப்பிடப்பட்டு இருந்த தொகையை விட அதிகமான பணம் சோதனையில் பிடிபட்டு இருப்பதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.