பவானி சாகர் அணையிலிருந்து வரும் 7ஆம் தேதி முதல், ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று கீழ்பவானி திட்டம் பிரதான கால்வாயின் இரட்டை மதகுகள் மற்றும் கென்னசமுத்திரம் பகிர்மான ஒற்றைப்படை மதகுகள் ஆகியவற்றின் கீழ் பாசனம் பெறும் விவசாய நிலங்களுக்கு, தண்ணீர் திறந்து விடக்கோரி, விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, வரும் 7ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ஆம் தேதி வரை தண்ணீர் திறக்க ஆணையிட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம், ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், கோபிச்செட்டிபளையம், பவானி, பெருந்துறை, திருப்பூர் மாவட்டம் காங்கேயம், கருர் மாவட்டம் அரவக்குறிச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1 லட்சத்து 3 ஆயிரத்து 500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மையை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று அறிக்கையில் முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.