கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் கவிழ்ந்த விசைப்படகு : 17 மீனவர்கள் பத்திரமாக மீட்பு

குளச்சல் சுற்றுவட்டாரக் கடல் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக நடுக்கடலில் படகு கவிழ்ந்து தத்தளித்த 17 மீனவர்களை, சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர்.

குமரிக்கடல் பகுதிகளில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்த நிலையில், முந்நூற்றுக்கு மேற்பட்ட விசைப்படகு, ஆயிரத்திற்கு மேற்பட்ட கட்டுமர மீனவர்களும் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

தொடர்ந்து கடல் சீற்றமாகக் காணப்படுவதால் மீனவர்கள் தங்களது விசைப்படகுகள், வலை உள்ளிட்ட மீன்பிடி கருவிகளைப் பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் தேங்காய்ப்பட்டணம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடி தொழிலுக்கு 17 மீனவர்களுடன் சென்ற மார்னிங் ஸ்டார் விசைப்படகு நடுக்கடலில் கடல் சீற்றத்தில் சிக்கிச் சேதமடைந்து கவிழ்ந்தது. இந்த விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய 7 வங்கதேச மீனவர்கள் உட்பட 17பேரை சக விசைப்படகு மீனவர்கள் பத்திரமாக மீட்டுக் கரை சேர்த்தனர்.

Exit mobile version