அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட குடிமராமத்து பணியால், 17 ஆண்டுகளுக்குப் பிறகு பாலாற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கரந்தமலை பகுதியிலிருந்து பாலாற்று நீர், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் கண்மாய்க்கு வந்து கொண்டிருக்கிறது.
கடந்த இரண்டு நாட்களாக திருப்பத்தூர், சிங்கம்புணரி, எஸ்.புதூர் ஆகிய பகுதிகளில் 84 மில்லி மீட்டர் அளவுக்கு மழை கொட்டித் தீர்த்த நிலையில், இந்த மழைநீர் பாலாற்றில் கலந்து திருப்பத்தூர் கண்மாய்க்கு செல்கிறது.
17ஆண்டுகளுக்குப் பின் கண்மாய்க்கு நீர் வருவதால், மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள் மலர் தூவி வரவேற்றனர். அதிமுக ஆட்சியில் கண்மாய்கள், கால்வாய்கள் முறையாக தூர்வாரப்பட்டதே இதற்குக் காரணம் என்று மகிழ்ச்சி தெரிவித்தனர்.
அமராவதி ஆற்றில் வினாடிக்கு 14 ஆயிரத்து 106 கன அடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், கரையோர பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையில் இருந்து நீர் திறப்பு குறைந்த நிலையிலும், கரூர் மாவட்டத்தில் பெய்த மழையினால் அமராவதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஆண்டான் கோவில் தடுப்பணையை நிறைத்தபடி, பசுபதி பாளையம் பகுதியில் பரந்து விரிந்து செல்லும் அமராவதி ஆறு, திருமுக்கூடலூரில் காவிரி ஆற்றுடன் கலக்கிறது.