தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நீலகிரி, சேலம், ராமநாதபுரம் மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் பருவமழை தீவிரமடைந்து வருவதால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடரும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம் 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. நீலகிரி, கோவை உள்ளிட்ட மலை மாவட்டங்களில் இன்று மிக அதிகக் கனமழை பெய்யும் என்றும், சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடிய விடிய விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. சாந்தோம், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, நுங்கம்பாக்கம், வில்லிவாக்கம், ஆவடி உள்ளிட்ட இடங்களில் பரவலாக மழை பெய்தது. இதனிடையே, சென்னையில் பள்ளி, கல்லூரிகள் இன்று வழக்கம் போல் இயங்கும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.