துபாயில் கனரக ஓட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் பற்றிய தொகுப்பு

துபாயில் கனரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்ற இந்தியாவின் முதல் பெண் என்ற சாதனையைப் படைத்துள்ளார் சுஜா. அவரைப் பற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு

கேரளவைச் சேர்ந்த 36 வயதுடைய சுஜா தங்கச்சனுக்கு சிறு வயது முதலே தான் ஒரு கன ரக வாகன ஓட்டுநர் ஆக வேண்டும் என்கிற ஆசை இருந்தது. கேரளப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றிய இவரின் மாமனைப் பார்த்துச் சிறு வயதிலையே கன ரக வாகனம் ஓட்டும் ஆசையை வளர்த்துக்கொண்டார் சுஜா. வாழ்க்கையில் ஒரு நாள், தானும் கன ரக வாகனத்தை இயக்குவேன் என உறுதி எடுத்துக் கொண்ட சுஜா குடும்ப சூழ்நிலை காரணமாகக் கேரளாவை விட்டு வெளியேறினார்.

வறுமை சூழ்நிலை காரணமாக துபாய்க்கு நண்பர்களின் உதவியால் வேலை தேடிச் சென்றார். அங்குச் சென்றதும் கேரளத்தில் இனி தனக்கு எதிர்காலம் இல்லை எனக் கருதி அங்கேயே தனக்கான வேலையைத் தேடிக்கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். சுஜாவின் சகோதரரின் நண்பர் துபாயில் உள்ள ஒரு பள்ளியில் ஓட்டுநராகப் பணியாற்றி வருகிறார். அவரின் உதவியால் அதே பள்ளியில் பேருந்து கிளீனராகச் சேர்ந்தார். பின்னர் பள்ளி நிர்வாகத்திடம் தனது ஆசைகளைக் கூறிய சுஜா, கன ரக ஒட்டுநர் உரிமம் பெறும் முயற்சியில் இறங்கினார். துபாயில் ஓட்டுநர் உரிமம் பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதற்குப் பல்வேறு பயிற்சிகள் இருக்கின்றன. இதற்காகத் தனியாகப் பாடம் எடுப்பார்கள். பாடம் மற்றும் செய்முறை வகுப்புகளில் பங்கேற்க வேண்டும். உருது மற்றும் ஆங்கில மொழிகளில் இந்த வகுப்புகள் இருக்கும். கட்டணமும் சற்று அதிகம்தான். பல கடினப் பயிற்சிகளைத் தாண்டி, 6 முறை தோல்வி அடைந்த பின் கடைசியாக கடந்த செப்டம்பர் 30 ஆம் தேதி ஒட்டுநர் உரிமம் பெற்றுள்ளார். துபாயில் கன ரக ஒட்டுநர் உரிமம் பெற்ற முதல் இந்திய பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார் சுஜா.
தோல்விகளைத் தன் முயற்சியின் படிக்கட்டுகளாக வைத்து சாதனை படைத்துள்ள சுஜா பெண்களுக்கு மிகப் பெரிய உந்துசக்தியாகத் திகழ்கிறார்.

Exit mobile version