இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல், ஆன்லைன் பண மோசடி செய்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஹஸ்பப்பி துபாயில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் இருந்து 30 மில்லியன் பவுண்ட் பணம் மற்றும் ஆடம்பரக் கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதுபற்றிய ஒரு சிறப்புத் தொகுப்பு…
தனி ஜெட் விமானம்… ஆடம்பரக் கார்கள்… ஸ்டார் விடுதிகளில் விருந்து… என தனது உல்லாச வாழ்க்கையை, இன்ஸ்டாகிராமில் போட்டோக்களை பதிவு செய்து பிரபலமானவர் ஹஸ்பப்பி (HUSHPUPPI). நைஜிரியாவைச் சேர்ந்த இந்த ஹஸ்பப்பிக்கு, உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை, 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் பின்தொடர்கின்றனர்.
இந்நிலையில் ஹஸ்பப்பி, ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதாக அமெரிக்கா, நைஜிரியா மற்றும் அமீரக நாடுகளில் இருந்து ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த இரண்டு மாதங்களாக ஹஸ்பப்பியை கண்காணித்த எஃப்.பி.ஐ (FBI), ஹஸ்பப்பி ஆன்லைன் மோசடியில் ஈடுபட்டதை உறுதி செய்தது.
அதையடுத்து, ஹஸ்பப்பியை அவரது சமுகவலைத்தள செயல்பாடுகளை வைத்தே கண்காணித்து வந்த எஃப்.பி.ஐ(FBI) காவல்துறையினர், துபாயில் உள்ள ஒரு அபார்ட்மெண்டில் அவர் தங்கி இருப்பதை உறுதி செய்தனர். அங்கு சென்று, தூங்கிக் கொண்டிருந்த ஹஸ்பப்பியை கைது செய்த காவல்துறையினர், அவரிடம் இருந்து 30 மில்லியன் பவுண்ட் பணத்தைக் கைப்பற்றினர். மேலும், 2 லட்சத்திற்கும் அதிகமானோரின் இ-மெயில் முகவரிகள், கணிணிகள் மற்றும் செல்போன்களையும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும், பெட்டி பெட்டியாக பணம் நிரப்பி வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் சிலவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் தன்னை கோடீஸ்வரர் போல் காட்டிக் கொள்ளும் ஹஸ்பப்பியின் நிஜப் பெயர் அப்பாஸ். நைஜிரியாவில் பழைய துணிகளை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்த அப்பாஸ், பிரபலமான நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் பெயரில் இணையத்தளங்களைத் தொடங்கி, அதன்மூலம் பணமோசடியில் ஈடுபட்டுள்ளார். சமூக வலைத்தளங்களில் தன்னை கோடீஸ்வரர் போல் காட்டி பணமோசடியில் ஈடுபட்ட, அப்பாஸை கைது செய்து கைவிலங்கோடு அழைத்துச் செல்லும் வீடியோவை அமீரக காவல்துறையினர் அதே சமூகவலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர். ஹஸ்பப்பி மோசடி செய்த 350 மில்லியன் பவுண்ட் என்பது இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 32 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாகும்.