குடித்துவிட்டுத் தொல்லை கொடுத்தவரை, பெற்ற தாய், கட்டிய மனைவி, பெற்ற மகன் என மூன்று பேரும் சேர்ந்து, கட்டிப்போட்டு, காதில் விஷம் ஊற்றிக் கொலை செய்த சம்பவம் பெரம்பலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜசேகரன். அவரது தாயார் செல்வி. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் திருமணமான ராஜசேகருக்கு, சுகுணா என்ற மனைவியும், இரு மகன்களும் உள்ளனர். ராஜசேகரனின் மனைவி சுகுணா, பெரம்பலூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த பல ஆண்டுகளுக்கு முன் வெளிநாட்டில் வேலை பார்த்த ராஜசேகர் குடிப்பழக்கத்துக்கு தீவிரமான அடிமையாக மாறினார். தினமும் குடித்துவிட்டு வந்து அவரது தாய், மனைவி மற்றும் மகன்களைத் திட்டுவதும், சண்டை போடுவதுமாக இருந்து வந்துள்ளார். அதனால், ஒரு கட்டத்தில் வெறுத்துப்போன ராஜசேகரின் மனைவி சுகுணா, அவரது மகன்களை அழைத்துக் கொண்டு பெரம்பலூரில் வீடு பிடித்துத் தனியாக வசித்து வந்தார். ராஜசேகர் அவரது தாயார் செல்வியுடன் இலையூரிலேயே வசித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சுகுணா, அவரது மகன்களை அழைத்துக் கொண்டு கணவர் ராஜசேகரைப் பார்க்க வந்தவர், கணவர் வீட்டிலேயே தொடர்ந்து தங்கி இருந்தார். அப்போதும் தொடர்ந்து ராஜசேகர் தினமும் குடித்துவிட்டு வந்து, திட்டுவதும், அடிப்பதுமாக இருந்துள்ளார். ஒருகட்டத்திற்குமேல் பொறுமை இழந்த சுகுணாவும், ராஜசேகரின் தாய் செல்வியும் சேர்ந்து ராஜசேகரைக் கட்டிப்போட்டு, அவரது காதில் பயிர்களுக்கு அடிக்கும் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றி உள்ளனர். அதில் துடிதுடித்து ராஜசேகர் உயிரிழந்ததாகச் சொல்லப்படுகிறது. இதற்கு, ராஜசேகரின் மகன் ரவிவர்மனும் உடந்தையாக இருந்ததாகத் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் பற்றிக் கேள்விப்பட்ட ஜெயங்கொண்டம் காவல் ஆய்வாளர் தமிழரசி தலைமையிலான காவல்துறையினர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, ராஜசேகரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ராஜசேகர் கொலைக்குக் காரணமான அவரது மனைவி சுகுணா, மகன் ரவிவர்மன், ராஜசேகரின் தாய் செல்வி ஆகியோரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், குடித்துவிட்டு வந்து தினமும் ராஜசேகர் கொடுத்த தொல்லை தாங்காமல், அவரது காதில் பூச்சிக் கொல்லி மருந்தை ஊற்றிக் கொலை செய்ததாக மூவரும் ஒப்புக் கொண்டு வாக்குமூலம் அளித்ததாகக் காவல்துறைத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதையடுத்து, அவர்கள் மூன்று பேரையும் கைது செய்த காவல்துறையினர், ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், ராஜசேகர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், நிலம் ஒன்றை விற்பது தொடர்பாக, அவரது மனைவி சுகுணாவுடன் சண்டைபோட்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் காவல்துறை நடத்திய விசாரணையில் தகவல்கள் வெளியாகி உள்ளன. பெற்ற தாயும், கட்டிய மனைவியும், பெற்ற மகனும் கட்டிப்போட்டு, காதில் விஷம் ஊற்றி ராஜசேகரைக் கொலை செய்த சம்பவம், ஜெயங்கொண்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.