சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசால், ரயில்கள் மூலம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது. இதற்கான செயல் வடிவம் குறித்து இந்த தொகுப்பில் காண்போம்.
சேலம் மாவட்டம் மேட்டூரில் உள்ள செக்கனூர் கதவணையிலிருந்து, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் முதல் அரக்கோணம் வரை, காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்பட்டு வருகிறது. இத்திட்டத்தை நீட்டித்து சென்னையின் குடிநீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு முடிவெடுத்தது.இதனை தொடர்ந்து அமைச்சர் எஸ். பி. வேலுமணி தலைமையில் ஆய்வு செய்யப்பட்டு போர்கால அடிப்படையில் பணி முடிக்கப்பட்டது. ஜோலார்பேட்டையருகே உள்ள மேட்டு சக்கரகுப்பத்தில் தரைதள நீர் தேக்க தொட்டியிலிருந்து குழாய் மூலம் நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பார்சம்பேட்டை ரயில்வே கேட் வரை பெரிய குழாய் மூலம் கொண்டுவரப்படுகிறது. ராட்சத குழாய்களில் சிறிய பைப்கள் மூலம் பிரிக்கப்பட்டு, ரயில்களில் நீர் நிரப்பப்படுகிறது. ஒரு ரயிலில் 50 உருளை கலன்கள் உள்ளது. 1 உருளைக்கலன் 50 ஆயிரம் கொள்ளளவு கொண்டது. 50 உருளை கலன்களிலும் ஒரே நேரத்தில் நீர் நிரப்பப்படுகிறது. மொத்தமாக 50 கலன்களிலும் நீர் நிரப்ப 2.30மணி நேரம் ஆகிறது. ஒரு ரயிலில் 25 லட்சம் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்படப்படுகிறது. தினசரி தலா 2 ரயில்கள் 2 முறை சென்னைக்கு வருகிறது. அந்த தண்ணீரை பெற, சென்னையில் வில்லிவாக்கம் ரயில்வே கேட் பகுதியில் இருந்து கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் வரை 3கி.மீ.க்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் தினமும் 1 கோடி லிட்டர் நீரானது கொண்டுவரப்படுகிறது. சென்னை வரும் நீர், 3மணி நேரத்தில் சுத்திகரிக்கப்பட்டு, அதன் பிறகு லாரிகள் மூலம் மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இதன் மூலம் சென்னையின் தண்ணீர் பற்றாக்குறை நீங்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.ரயில்கள் மூலம் தண்ணீர் கொண்டுவருவதற்கு தெற்கு ரயில்வே துறைக்கு, தமிழக அரசு , ஒரு நாளுக்கு தோராயமாக 8.50 லட்சம் ரூபாயை கட்டணமாக வழங்குவது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post