விதிமீறல் கட்டிடங்களில் குடிநீர்,மின்சார இணைப்பை துண்டிக்க வேண்டும் : உயர் நீதிமன்றம் உத்தரவு

விதிமீறல் கட்டிடங்களில் மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்பை உடனடியாக துண்டிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மண்ணடியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டு வந்த கட்டிடத்தின் கட்டுமானப் பணிகளை நிறுத்தும்படி மாநகராட்சி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து அந்த கட்டிடத்தின் உரிமையாளர் மெஹ்ராஜ் பேகம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, விதிகளை மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கான மின்சாரம் மற்றும் குடிநீர் இணைப்புகளை உடனடியாக துண்டிக்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். ஆக்கிரமிப்புகளும், விதிமீறல் கட்டடங்களும், புற்று நோய் போல் பரவி வருவதாக வேதனை தெரிவித்த நீதிபதிகள், விதிகளை மீறுபவர்களை நீதிமன்றம் பாதுகாக்காது என்றும் திட்டவட்டமாக தெரிவித்தனர்.

Exit mobile version