தமிழகத்தில் ஒரே வாரத்தில் 1,500 சிறுவர் ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க புலனாய்வு அமைப்பான FBI, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அறிக்கை ஒன்றை அனுப்பியது. அதில், சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை அதிகம் பார்ப்பவர்களின் பட்டியலில் தமிழகம் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதையடுத்து, தமிழகத்தில் சிறுவர்கள் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள் யார் என்பதை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் இறங்கினர். இந்தநிலையில், நவம்பர் மாதம் ஒரே வாரத்தில், 1,500 சிறுவர்கள் ஆபாச வீடியோக்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார்.
சிறுவர்கள் ஆபாச வீடியோக்களை பதிவிறக்கம் செய்தவர்களை பிடிக்க திட்டமிட்டுள்ள காவல்துறையினர், ஆபாச வீடியோக்கள் வாட்ஸ் அப்பில் பரப்பப்பட்டதா என விசாரித்து வருகின்றனர். ஐபி முகவரி மூலம் ஆபாச வீடியோக்கள் பார்ப்பவர்களை எளிதாக பிடித்து விட முடியும் என்று கூடுதல் டிஜிபி ரவி தெரிவித்துள்ளார். சிறுவர்களின் ஆபாச வீடியோக்களை பார்ப்பவர்கள், பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்வோர் மீது வழக்குப்பதிவு செய்யவும் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர்.