அதி தீவிர புயலாக வலுவடைந்துள்ள டவ் தே, குஜராத்தின் போர்பந்தரில் கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படும் நிலையில் கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது.
கேரள மாநிலம் முழுவதும் கடல் சீற்றம் காணப்படுவதால், கொச்சி, மலப்புரம் உள்ளிட்ட 6 மாவட்டங்கள் கடும் பாதிப்பை சந்தித்துள்ளன. ஆளுயரத்திற்கு எழுந்த அலைகள் கடற்கரையை ஓட்டியுள்ள பகுதிகளில் புகுந்து குடியிருப்புகளை வெள்ளக்காடாக மாற்றியுள்ளன.
திருவனந்தபுரத்தில் கடல் அலைகள் ஆக்ரோஷத்துடன் மோதியதில் பல்வேறு இடங்களில் தடுப்புச்சுவர்கள் சேதமடைந்தன. காசர்கோடு அருகே கடற்கரை பகுதியில், புயல் தாக்கத்தின்போது, மாடி வீடு இடிந்த விழுந்த வீடியோ வெளியாகி உள்ளது. மூசோடு கடற்கரையில் உள்ள வீடடின் மேல்தளத்தில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த குடுமபத்தினர் வசித்து வந்த நிலையில், புயல் எச்சரிக்கையை அடுத்து அவர்கள் காலி செய்தனர். இந்த நிலையில், கடல் கொந்தளிப்புடன் தண்ணீர் வெளியேறியதால், மணலில் அரிப்பு ஏற்பட்டு கட்டடம் இடிந்து விழுந்தது.
இதனிடையே கோழிக்கோடு மற்றும் கொச்சியில் இருந்து, அரபிக் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்ற 23 மீனவர்கள் இதுவரை கரை திரும்பவில்லை. இவர்களில் 10 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்களாவர். மீனவர்களுடனான தகவல் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ள நிலையில், அவர்களை மீட்பு படையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.