பஹாமஸ் தீவில் ஏற்பட்ட டோரியன் புயலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 20ஆக உயர்ந்துள்ளது.
அதி தீவிரமான 5ம் நிலைப் புயலாக அறியப்பட்ட டோரியன் புயல் அட்லாண்டிக் பெருங்கடல் பகுதியில் கடந்த 24ம் தேதி உருவாகி கரீபியன் தீவுக் கூட்டங்களான பஹாமஸ் தீவுகளைத் தாக்கியது. எல்போ கே, மற்றும் கிராண்ட் பஹாமா ஆகிய இரு கடற்கரை நகரங்களில் கரையைக் கடந்தது.
அப்போது மணிக்கு 350 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக் காற்று வீசியதுடன், கனமழையும் கொட்டித் தீர்த்தது. இதில் கார்கள், படகுகள், கண்டெய்னர்கள், வீடுகளின் மேற்கூரைகள் என அனைத்தும் டோரியன் புயலில் சேதமடைந்தன.
கடுமையான வெள்ளப்பெருக்கால் கடல் நீர் நகருக்குள் புகுந்ததால், தண்ணீரில் சிக்கி மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது டோரியன் புயலில் பலியானவர்களின் எண்ணிக்கை 20ஐ தாண்டி உள்ளதாக அந்நாட்டு பிரதமர் ஹியூபர்ட் மின்னஸ் தெரிவித்துள்ளார்.