கடந்த 2014ம் ஆண்டு ரஷ்யாவின் சோச்சி (SOCHI) நகரில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் தொடரில், அந்நாட்டைச் சேர்ந்த பல வீரர்கள் ஊக்கமருந்து பயன்படுத்தியது சோதனையில் தெரியவந்தது.
மேலும் ஊக்கமருந்தை பயன்படுத்த அந்நாட்டு அரசே ஆதரவாக செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஊக்கமருந்து பயன்படுத்திய வீரர்களை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி வாழ்நாள் தடை விதித்தது. மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவும் அந்நாட்டிற்கு தடைவிதிக்கப்பட்டது.
இதனால் 2016ல் நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஊக்க மருந்து பயன்படுத்தாத ரஷ்ய வீரர்கள், ஒலிம்பிக் கொடியின் கீழ் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர். சர்வதேச ஊக்க மருந்து எதிர்ப்பு நிறுவனம் நடத்திய விசாரணையில், மாஸ்கோ ஆய்வகத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஊக்க மருந்து சோதனை முடிவுகள் நம்பகத் தன்மை அற்றதாக உள்ளதாகவும் ,முடிவுகள் மாற்றப்பட்டுள்ளதும் தெரியவந்தது
போலியான ஆதாரங்கள் அளித்தல், ஊக்கமருந்து சோதனையில் சிக்கியவர்களைக் காப்பாற்றுவதற்காக ஆவணங்களை அழித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதாக அந்நாட்டின் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனால் ரஷ்ய வீரர்கள் சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க 4 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து நியூயார்க்கில் உள்ள விளையாட்டு தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் சர்வதேச தீர்ப்பாயத்தில் ரஷ்யா முறையிட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம் 4 ஆண்டுகள் தடையை 2 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டுள்ளது.
இதனால் அடுத்த ஆண்டு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற உள்ள ஒலிம்பிக் தொடர், 2022 ம் ஆண்டு சீன தலைநகர் பிஜீங்கில் நடைபெறும் குளிர்கால ஒலிம்பிக் தொடர் மற்றும் கத்தாரில் நடைபெறும் சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க இயலாத சூழல் உருவாகி உள்ளது. ரஷ்யாவுக்கு இந்திய மதிப்பில் சுமார் 15 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 2 ஆண்டுகள் சர்வதேச போட்டிகளை ரஷ்யா நடத்தவும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட சில அதிகாரிகள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய வீரர்கள் அந்நாட்டின் கொடி, தேசிய கீதம், உள்ளிட்ட அடையாளங்களைப் பயன்படுத்தாமல் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உள்பட சில அதிகாரிகளும் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.