வேண்டாம் என பெயர் வைத்த பெண்ணால் தந்தைக்கு பெருமை

முன்னோர்களின் மூட நம்பிக்கைகளை தவிடு பொடியாக்கும் விதமாக லட்சிய சாதனை படைக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை இருந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் ஒரு கிராமத்து பெண். படிப்பாலும், திறமையாலும் தனக்கு ஏற்பட்ட பாதிப்புகளை தகர்த்து எறிந்து பெண்களை பாதுகாப்போம், பெண்களுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தில் அரசு தூதுவராக நியமிக்கப்பட்டது குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த ஆர்.கே.பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாராயணபுரத்தை சேர்ந்தவர் அசோகன். விவசாயக் கூலித் தொழிலாளியான இவருக்கும் கௌரி என்ற பெண்ணிற்கும் 1994 ல் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அடுத்தடுத்து பிறந்த 2 குழந்தைகளும் பெண்ணாக பிறக்கவே, அடுத்ததாக பிறக்கும் குழந்தை பெண்ணாக பிறந்தால் அதற்கு வேண்டாம் என்று பெயர் சூட்டுமாறு உறவினர்கள் தெரிவித்தனர். அதே போன்று 3-வதாக பிறந்த குழந்தையும் பெண்ணாக பிறக்கவே அதற்கு வேண்டாம் என்றே பெயர் வைத்தார் அசோகன். இதனையடுத்து 4-வதாக பிறந்ததும் பெண்ணாகவே பிறந்துள்ளது.

விவசாயக் கூலித் தொழிலாளியாக இருந்தாலும் 4 பெண் பிள்ளைகளையும் நல்ல முறையில் படிக்க வைத்தார் அசோகன். இந்த நிலையில், மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில், 2-வது மகள் யுவராணி பி.எஸ்.சி முடித்து வேலைக்கு முயற்சி செய்து வருகிறார். வேண்டாம் என்று பெயர் சூட்டப்பட்ட 3வது மகள், அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்தார். உடன் படிப்பவர்கள் பெயரை சொல்லி கேலி செய்த போது அவர் வேதனை அடைந்தார்.

படைத்தல், காத்தல், அழித்தல் என்ற 3 நிலைகளிலும் பெண்ணே முக்கியமானவளாக இருக்கக் கூடிய இந்த உலகத்தில் தனக்கு ஏற்பட்ட வேதனையை வெளிக்காட்டாமல், எதற்கும் சளைத்தவள் அல்ல என்பதை நிரூபிக்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் அவர் படிப்பை தொடர்ந்தார். பிளஸ் டூ-வில் நல்ல மதிப்பெண் பெற்றதால் சென்னையில் உள்ள பொறியியல் கல்லூரியில் ஈசிஇ படிப்பில் சேர்ந்தார். பல்வேறு நாடுகளிலிருந்து வேலை வாய்ப்புகள் வரும்
என்பதால் ஜப்பான் மொழியை அவர் கற்றார். அப்போது தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க இந்த கல்லூரியை நாடியது ஜப்பான் நாட்டு (HUMAN RESOCIA )என்ற நிறுவனம்.

இந்த தேர்வில் 9 மாணவர்கள் மற்றும் 2 மாணவிகளை தேர்வு செய்தது. அதில் தானியங்கி கதவுகளால் பாதுகாப்பு மற்றும் தற்காப்பு குறித்து, வேண்டாம் அளித்த செயல்முறை விளக்கத்தை கேட்ட ஜப்பான் நிறுவனம் உடனடியாக இவரை தேர்வு செய்து ஆண்டுக்கு 22 லட்சம் ரூபாய் சம்பளம் என்ற உத்தரவையும் வழங்கியது.

இந்நிலையில் வேண்டாம் என்ற பெயர் கொண்ட பெண்ணை அவரது திறமையை பாராட்டும் வகையில் ஜப்பான் தொழிற்சாலை நிறுவனம் தேர்வு செய்ததை அறிந்த தமிழக அரசு, மத்திய அரசின் திட்டமான பெண்களை பாதுகாப்போம், பெண்களுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமித்து உத்தரவிட்டது. அவருக்கு மாவட்ட ஆட்சியர் சால்வை அணிவித்து , தூதுவருக்கான சான்றிதழை வழங்கி
பாராட்டினார்.

பெண்கள் அனைவரும் சாதிக்கப் பிறந்தவர்கள் தான். யாரும் பெண் குழந்தைகளை இனி மேல் வேண்டாம் என்றும் சொல்ல வேண்டாம் என்று வலியுறுத்துகிறார் வேண்டாம்..

தங்களை தாங்களே யாரும் தாழ்த்திக் கொள்ளாமல் சாதிக்க முடியும் என்பதால் நினைத்ததை படித்து வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்ட வேண்டாம், திருவள்ளூர் மாவட்ட தூதுவராக நியமித்த அரசுக்கும், மாவட்ட ஆட்சியருக்கும் தனது நன்றியினை தெரிவித்துக் கொண்டார்.

3-வதாக பிறந்த மகளுக்கு வேண்டாம் என பெயர் சூட்டினாலும், அவர் படைத்து வரும் சாதனைகளை கண்டு பெருமிதம் கொள்வதாக தந்தை அசோகன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

பெண்களைப் பொறுத்த வரை சாதிக்க வேண்டும் என்று நினைத்தால் அதில் இருந்து பின் வாங்குவதில்லை. எனவே பெண்களை மதிப்போம்.. பெண்களை போற்றுவோம்..

Exit mobile version