கொரோனா வைரஸ் காற்று மூலம் பரவுமா என்பதில் ஆய்வாளர்கள் இடையே இரு வேறு கருத்துக்கள் நிலவி வருகின்றன. காற்று மூலமாக கொரோனா வைரஸ் பரவுமா, இல்லையா என்பது குறித்து தொடர்ச்சியாக ஆய்வாளர்கள் இடையே விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. தற்போதைய சூழலில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவரின் எச்சில் துளிகள் மூலமாக கொரோனா பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் பொருட்டே தனிமனித இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை அடிக்கடி சுத்தம் செய்தல் உள்ளிட்ட நோய் தடுப்பு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், 2 மாதங்களுக்கு முன்பு தண்ணீர் மூலமாகவும் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாக பேச்சு அடிபட்டது. ஆனால், அதனை ஆய்வாளர்கள் மறுத்துள்ளனர். அதே நேரத்தில், காற்று மூலம் வைரஸ் பரவ அதிகம் வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றனர். ஆனால், உலக சுகாதார நிறுவனம் அந்த கருத்தை இதுவரை உறுதிப்படுத்தவில்லை. இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு 32 நாடுகளை சேர்ந்த 239 விஞ்ஞானிகள், உலக சுகாதார நிறுவனத்திற்கு கடிதம் ஒன்றை எழுதினர். அதில், காற்று மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதாகவும், உலக சுகாதார நிறுவனம் இதனை குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்திருந்தனர். எனவே, இது தொடர்பாக புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளை வெளியிட, உலக சுகாதார நிறுவனத்திடம் அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், காற்று மூலம் கொரோனா பரவும் என்பதற்கான சில ஆதாரங்களை உலக சுகாதார நிறுவனம் தற்போது ஏற்றுக் கொண்டுள்ளது. ஜெனீவாவில் இது தொடர்பாக பேசிய அந்நிறுவனத்தின் மூத்த நிர்வாகி Benedetta Allegranzi, நெருக்கமான, காற்றோட்டமில்லாத பொதுஇடங்களில் காற்று மூலம் வைரஸ் பரவும் என்பதை மறுக்க முடியாது என தெரிவித்தார். இருப்பினும், இது தொடர்பாக மேலும் பல ஆதாரங்கள் தேவைப்படுவதாகவும், இது தொடர்பான ஆய்வுகளை ஆதரிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். போதிய ஆதாரமின்றி காற்று மூலம் கொரோனா பரவும் என அறிவித்தால், பொதுமக்களிடையே தேவையில்லாத பீதி ஏற்படும் என பலர் கருத்து தெரிவிக்கின்றனர். சுகாதாரப் பணியாளர்கள் மருத்துவமனைக்கு செல்வதை தவிர்க்கக்கூடும் எனவும், தரம் வாய்ந்த N-95 ரக முகக்கவசங்களை வாங்க பொதுமக்கள் படையெடுக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால், அத்தகைய முகக்கவசங்களுக்கான தட்டுப்பாடு ஏற்படும் எனவும் கருதப்படுகிறது. அத்துடன், 3 அடிகளுக்கு தனிமனித இடைவெளியை கடைபிடிப்பது போன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளிலும் பல மாற்றங்கள் செய்யவேண்டி இருக்கும். இத்தகைய காரணங்களை கருத்தில் கொண்டுதான், உலக சுகாதார நிறுவனம் புதிய அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னர் போதிய ஆதாரங்களை திரட்டி வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, கொரோனா வைரஸ் எந்தெந்த முறைகளில் பரவுகிறது என்பது தொடர்பான சுருக்கமான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.