கொரோனா நோயாளிகளை கையாளுவதற்கு மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் நியமனம்!!!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக, 675 புதிய மருத்துவர்களை 3 மாத ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்ய சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த, பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. ஏற்கனவே கொரோனா பாதித்த நோயாளிகளை கையாள்வதற்கென, மருத்துவர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீசியன் ஆகியோரை தமிழக அரசு நியமனம் செய்தது. அந்த வகையில், தற்போது ஒப்பந்த அடிப்படையில் புதிதாக 675 மருத்துவர்களை, 40 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணியமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவ தேர்வாணையத்தில் பதிவு செய்த மருத்துவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில், உடனடியாக பணியில் சேர வேண்டும் எனவும் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. 3 மாத காலம் முடிந்து, தேவை ஏற்படும் பட்சத்தில் பணி நீட்டிப்பு செய்யப்படும் எனவும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புதிதாக நியமனம் செய்யப்படவுள்ள 675 மருத்துவர்கள், தமிழகத்தில் உள்ள 25 மருத்துவ கல்லூரிகளில், பெரிய மருத்துவ கல்லூரிகளுக்கு 30 பேரும், சிறிய மருத்துவ கல்லூரிகளுக்கு 20 பேரும் நியமிக்கப்படவுள்ளனர்.

Exit mobile version