மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பாதது கவலையளிக்கிறது…

கிராமப்புற மக்களுக்கு மருத்துவ சேவை வழங்க அரசு எண்ணற்ற முயற்சிகள் எடுத்தாலும், மருத்துவர்கள் கிராமப்புறங்களில் பணியாற்ற விரும்பாத சூழல் கவலையளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கிராமப் புறங்கள், மலைப் பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு, மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண்கள் வழங்குவதற்காக, அவர்கள் பணியாற்றிய பகுதிகளை தொலைதூர பகுதி, எளிதில் அணுக முடியாத பகுதி, கிராமப் பகுதி என வகைப்படுத்தி தமிழக அரசு, மார்ச் 6ம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, கிராமப்புறங்களுக்கு சென்று மருத்துவர்கள் பணியாற்ற தயாராக இல்லாததால் தான், அரசு அவர்களை எப்படியாவது அங்கு பணியாற்ற வைக்க வேண்டும் என்ற நல்ல நோக்கத்தோடு, மருத்துவர்கள் மருத்துவ மேற்படிப்பில் சேர சலுகை மதிப்பெண் போன்ற விஷயங்களை அறிவிக்க வேண்டிய நிர்பந்தத்துக்கு தள்ளப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

எனவே ஓய்வு பெற்ற நீதிபதி குழு முன், வரும் மே மாதம் 31ம் தேதிக்குள் சம்பந்தப்பட்டவர்கள் மனு அளிக்கலாம் எனவும், அந்த மனுக்களை ஆய்வு செய்து, பகுதி வரையறை மாற்றம் தொடர்பாக ஜூலை 31ம் தேதிக்குள் குழு தன் முடிவை அறிவிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

Exit mobile version