கடலூர் மாவட்டம் சிதம்பரம் அரசு மருத்துவமனையில், கர்ப்பிணி ஒருவர் பிரசவ வலியால் துடித்த போது, மருத்துவர்கள் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதால், குழந்தை இறந்து பிறந்துள்ளதாக உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
சிதம்பரம் அரசு மருத்துவமனையில், குச்சூர் கிராமத்தை சேர்ந்த கர்ப்பிணியான இளவரசி என்பவர் பிரசவத்திற்காக நேற்றிரவு அனுமதிக்கப்பட்டார்.
கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்ட போது, அவரது உறவினர்கள் மருத்துவரிடம் கூறியதாக தெரிகிறது. அப்போது, அவர்கள் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டியுள்ள உறவினர்கள், நீங்கள் என்ன மருத்துவரா? என அலட்சியமாக பதிலளித்தாகவும் உறவினர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
இளவரசிக்கு அதிக அளவில் வலி ஏற்பட்டதை அறிந்த மருத்துவர்கள், குழந்தை அசைவு இல்லாமல் இருப்பதை அறிந்து அறுவை சிகிச்சை மேற்கொண்டதாகவும், அப்போது பனிக்குடம் உடைந்து குழந்தை இறந்து பிறந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தனர்.
இதனால், கர்ப்பிணியின் உறவினர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
மருத்துவர்கள் தக்க தருணத்தில் சிகிச்சை அளித்திருந்தால், குழந்தையை காப்பாற்றியிருக்க முடியும் என கர்ப்பிணியின் தாயார் ஈஸ்வரி வேதனையுடன் தெரிவித்தார்.
இந்த நிலையில், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள் ஊசி செலுத்தவதற்கு நோயாளிகளிடம் பணம் கேட்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
மேலும், நோயாளிகளிடம் அக்கறை காட்டாமல் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அலட்சியமாக நடந்து கொள்வதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.