பிறந்த குழந்தை ஒன்று மருத்துவரை முறைத்துப் பார்க்கும் புகைப்படம் உலகெங்கும் வைரலாகி வருகின்றது. யார் அந்தக் குழந்தை? ஏன் முறைத்துப் பார்க்கிறது?
உலகில் மிகப் பெரும்பாலான குழந்தைகள் பிறந்தவுடன் அழவே செய்கின்றன. மிக அரிதாக புன்னகை பூக்கும் குழந்தைகளும் உண்டு. சில குழந்தைகள் கண் திறக்கவே மணிக் கணக்கில் நேரம் ஆகும், அவை கண்ணை மூடிக் கொண்டே அழும். இதுதான் குழந்தைகளின் பொதுவான வழக்கம். இந்நிலையில், பிரேசில் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள மருத்துவமனையில் ’இசபெல்லா பெரைரா டி ஜீசஸ்’ என்ற பெண் குழந்தை பிறந்த சற்று நேரத்தில் மருத்துவரை முறைத்துப் பார்த்து உள்ளது.
இசபெல்லாவின் பெற்றோர் குழந்தையைப் புகைப்படம் எடுக்க ஏற்கனவே நியமித்து இருந்த தொழில்முறை புகைப்படக் கலைஞர் ஒருவர், குழந்தை முறைப்பதைப் புகைப்படம் எடுக்க அந்தப் புகைப்படம்தான் தற்போது உலகெங்கும் வைரலாகி வருகின்றது. இந்தப் புகைப்படத்தில் குழந்தை முறைத்தாலும் கூட, பார்ப்பவர்களுக்கு இது புன்னகையையே வரவழைக்கின்றது.
20ஆம் தேதி பிறக்க நாள் குறிக்கப்பட்ட அந்தக் குழந்தை 13ஆம் தேதியே வெளியே எடுக்கப்பட்டது, இதனால் ‘ஏன் என்ன முன்னாடியே வெளிய எடுத்தீங்க?’ எனக் கேட்பது போல இந்தப் புகைப்படம் உள்ளதாக இசபெல்லாவின் உறவினர்கள் கூறினர்.
பிறந்த போது இசபெல்லா அழவில்லை, எனவே குழந்தையின் ஆரோக்கியத்தை சோதிக்க மருத்துவர்கள் இசபெல்லாவை அழவைக்க முயற்சி செய்தனர். அதனால் இசபெல்லா கோபத்தோடு பார்த்திருக்கலாம் என்றும் கூறப்படுகின்றது. கடைசியில் தொப்புள்கொடி வெட்டப்பட்ட போதுதான் இசபெல்லா அழுது இருக்கிறாள்.
எது எப்படி இருந்தாலும், மீம் கிரியேட்டர்களுக்குக் கிடைத்த புது டெம்ப்ளேட்டாகவும் இசபெல்லாவின் இந்தப் புகைப்படம் மாறி உள்ளது.
சில மாதங்கள் முன்பு அமெரிக்க அதிபர் டிரம்பை கிரேட்டா தன்பெர்க் முறைத்த புகைப்படங்கள் உலகெங்கும் வைரலாகின, அதைத் தொடர்ந்து மீண்டும் இன்னொரு மிரட்டலான முறைக்கும் புகைப்படத்தை இசபெல்லா இணைய உலகுக்கு அளித்து உள்ளார்.