மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில், கடந்த 2 நாட்களில்,15 மருத்துவர்கள் மற்றும் 9 செவிலியர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் திருச்சிக்கு அடுத்தபடியாக, மதுரையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா சிறப்பு வார்டுகளும் நிரம்பியுள்ளன. இதனிடையே, ராஜாஜி அரசு மருத்துவமனையில், கடந்த இரண்டு நாட்களில் மட்டும், 15 மருத்துவர்களுக்கும் 9 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ராஜாஜி மருத்துவமனையில், போதிய அளவில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் இல்லாததால், சுழற்சி முறையில் பணியமர்த்தப்படுவதாக குற்றச்சாட்டு நிலவி வருகிறது. இதனால், கொரோனா தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகரித்துள்ளதுடன், மருத்துவப் பணியாளர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும், நோயாளிகளும் விரைவாக சிகிச்சை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். தமிழக அரசு கூடுதல் மருத்துவப் பணியாளர்களை நியமிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.