இந்தியாவில் அதிபர் டிரம்ப் பயன்படுத்தும் BEAST காரின் சிறப்புகள் என்னென்ன தெரியுமா?

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அரசு முறைப் பயணமாக இந்தியா வர உள்ளார். அமெரிக்க அதிபர் குறித்த செய்திகளைபோலவே,  பயணங்களில் அவர் பயன்படுத்தும் ஆர்மர்டு லிமோசின் காரும் ஊடகங்களில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்தியாவில் அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள இருக்கும் அமெரிக்க அதிபர்  டிரம்ப், விமானம் மூலம் குஜராத் வந்தவுடன் உலகின் மிகப் பெரிய கிரிக்கெட்  மைதானமான மோட்டேரா மைதானத்தை திறந்து வைக்க உள்ளார். இந்நிகழ்ச்சிக்கு அவர் பீஸ்டு (BEAST) எனப் பெயரிடப்பட்ட தனது காரில் செல்கிறார். ஆர்மர்டு லிமோசின் (ARMOURED LIMOUSINE) வகையைச் சேர்ந்த இந்த காரைக் கடந்த 2018ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிரம்ப் பயன்படுத்தி வருகிறார்.

காரின் சிறப்பம்சங்கள்:

டிரம்ப் பயன்படுத்த கூடிய  ஆர்மர்டு லிமோசின் (ARMOURED LIMOUSINE) காரின் கண்ணாடிகள் 5 அடுக்கு பாதுகாப்பு  கொண்டவை. குண்டு துளைக்காத இந்த கண்ணாடிகளை ஓட்டுநர் அமர்ந்திருக்கும் இடத்தில் மட்டுமே திறக்க முடியும். அதுவும் 3 அங்குலம் மட்டுமே கீழே இறங்கும்.

ஆர்மர்டு லிமோசின் காரில், ஆபத்து நேரங்களில் பயன்படுத்தக் கூடிய சிறு துப்பாக்கிகள், கண்ணீர் புகைக் குண்டுகள், அதிபருக்குப் பொருந்தும் பாதுகாக்கப்பட்ட ரத்தம் ஆகிய பல வசதிகளும் உள்ளன.

ஓட்டுநரின் அறையில், தொலைத்தொடர்பு மற்றும் ஜிபிஎஸ் கருவிகள் பொறுத்தப்பட்டுள்ளன. காரின் பின்புறத்தில், பென்டகன் மற்றும் அமெரிக்க துணை அதிபரை நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வகையில் சாட்டிலைட் தொலைபேசி இணைக்கப்பட்டு உள்ளது.

காரின் மையப் பகுதியானது ஸ்டீல், டைட்டானியம், அலுமினியம் மற்றும் செராமிக்கினால் 5 அங்குல தடிமனுக்கு உருவாக்கப்பட்டது.
முன்பகுதியில் கண்ணீர் புகைக் குண்டுகளை ஏவும் கருவிகள் மற்றும் இரவிலும் தெளிவாக பார்க்கக் கூடிய கேமிராக்கள்
பொருத்தப்பட்டுள்ளன.  தீ பற்றுவதைத் தடுக்கும் விதமாகவும் குண்டு துளைக்காத வகையிலும் இந்தக் காரின் பெட்ரோல் டேங்க் வடிவமைக்கப்பட்டுள்ளது.

காரின் ஓட்டுநர், அமெரிக்காவின் சீக்ரெட் சர்வீஸ் (secret service) அதிகாரிகளிடம் பயிற்சி பெற்றவராக இருப்பார். எந்த ஆபத்திலிருந்தும் தப்பிக்கும் திறமை உடையவராகவும், காரை 360 டிகிரி அளவிற்கு திருப்பும் அளவுக்கு சிறந்த ஓட்டுநராகவும் அவர் இருப்பார்.

காரின் பின்புறம், அதிபரை தவிர மேலும் 4 பேர் அமர இடம் இருக்கும். ஓட்டுநருக்கும் பின்னால் அமர்ந்திருப்பவர்களுக்கும் இடையில், கண்ணாடி தடுப்பு அமைக்கப்பட்டிருக்கும். இதனை அதிபர் மட்டுமே கீழே இறக்க முடியும். அதிபர் அமரும் பகுதியில் அபாய பொத்தான் ஒன்றும், தன்னிச்சையான சுவாச கருவியும் பொருத்தப்பட்டிருக்கும்.

காரின் கதவுகள் 8 அங்குலம் தடிமன் கொண்டவை. அதாவது, போயிங் 757 விமானத்தின் கதவுகளுக்கு இணையான பாதுகாப்பை கொண்டவை இந்தக் கதவுகள்.  இவை எந்தவித ஆயுதங்களையும் எதிர்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

துளையிட முடியாத கெவ்லர் சிந்தடிக்கால் ஆன டயர்கள் இந்தக் காரில் பயன்படுத்தப்படுகின்றன. சாதாரண டயர்களை விட இவை 5 மடங்குக்கு வலிமை வாய்ந்தவை. ஒருவேளை டயர் வெடித்தால் கூட, எந்தவித சலனமும் இன்றி கார் இயங்கும். காரின் சாசீஸ் என்று அழைக்கப்படும் அடிச்சட்டம் வெடிகுண்டுகளின்  தாக்குதல்களைக் கூட எதிர்கொள்ளும் வகையில் வடிமைக்கப்பட்டு உள்ளது.

Exit mobile version