ஒரு பர்கரும் ஒரு பாக்கெட் பிரெஞ்ச் பிரைஸ்சும் 10 ஆண்டுகளாக கெட்டுப் போகாமல் அப்படியே உள்ளன என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
பிரபல உணவுத் தயாரிப்பு நிறுவனமான மெக்டொனாட்ஸ்’க்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. இந்த நிறுவனத்தின் உணவுகள் திறந்த நிலையில் மாதக் கணக்கிலும் ஆண்டுக் கணக்கிலும் வைத்தாலும் கூட, சமீபத்தில்தான் சமைத்தது போல அப்படியே இருக்கும் – என்று ஐரோப்பிய நாடுகளில் கூறப்படுகின்றது. இதனை நிரூபிக்க பலர் மேக் டொனாட்ஸ்சின் உணவுகளை வாங்கி அதைப் பல ஆண்டுகளுக்கு அப்படியே வைத்திருந்து மக்களுக்கு காட்டி உள்ளனர்.
இப்படிப்பட்ட சோதனைகளின் உச்சமாக உள்ளது ஐஸ்லாந்து நாட்டில் கண்காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மெக்டொனால்ட்ஸ் பர்கர் மற்றும் பிரெஞ்ச் பிரைஸ் பாக்கெட்டுகள். ஐஸ்லாந்து நாட்டில் 2009ஆம் ஆண்டில் அனைத்து மெக்டொனால்ட்ஸ் உணவகங்களும் மூடப்பட்டன. அப்போது வாங்கப்பட்ட இந்த உணவுகள், சரியாகப் 10 ஆண்டுகள் கடந்த பின்னரும், நேற்றுதான் சமைத்தது போல அப்படியே உள்ளன!. அவை சுற்றப்பட்டுள்ள தாள்கள் பழையவையாக மாறி உள்ள நிலையிலும், அந்த உணவுகளில் பழைய தன்மை காணப்படவில்லை!. இந்த உணவுகளைப் பார்க்க என்றே உலகெங்கிலும் இருந்து பலர் ஐஸ்லாந்துக்கு வருகின்றனர். தினமும் இணைய தளத்தில் சுமார் 4 லட்சம் பேர் இதனைப் பார்வையிட்டும் வருகிறார்கள்.
இப்படியாக மெக்டொனால்ட்ஸ் உணவுகள் பல காலம் கெட்டுப் போகாமல் உள்ளதால், அவை இயற்கைக்கு முரணானவை என்று சிலர் கடும் விமர்சனங்களை முன்வைத்து உள்ளனர். ஆனால் மெக்டொனாட்ஸ் நிறுவனத்தின் தரப்பில், ‘காற்றில் ஈரப்பதம் உள்ளதால்தான் எங்கள் உணவுகள் கெட்டுப் போகாமல் உள்ளன. ஈரப்பதமற்ற நாடுகளில் அவை வற்றும்போது பழையதாவது தெரியும்’ – என்று விளக்கம் அளித்து உள்ளது…
எது எப்படி இருந்தாலும், உணவுகளை சமைத்த உடனேயே உண்பதுதான் நம் உடலுக்கு நல்லது என்பதே பொதுவான கருத்தாக உள்ளது.