தமிழக அரசின் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்தை, சம்பளமாகவும், ஓய்வூதியமாகவும் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தற்போது நடத்தி வரும் போராட்டம் உழைக்கும் ஏழை, எளிய மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2017ஆம் ஆண்டு அக்டோபர் 1-ம் தேதி அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வு குழு அளித்த பரிந்துரைகளை ஏற்றது தமிழக அரசு. இதன் மூலம் அரசுக்கு 14 ஆயிரத்து 719 கோடி ரூபாய் கூடுதல் செலவானது.
கடந்த 2017 – 18 ஆம் ஆண்டில் தமிழக அரசின் மொத்த வரி வருவாய் 93 ஆயிரத்து 795 கோடி ரூபாய் ஆகும்.
இதில் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியத்திற்கு மட்டும் 65 ஆயிரத்து 403 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இது மொத்த வரி வருவாயில் 70 சதவீதம் ஆகும்.
எஞ்சியுள்ள 30 சதவீத வரி வருவாயில் 24 சதவீதம், நலத்திட்டங்களை நிறைவேற்ற பெறப்பட்ட கடனுக்கு வட்டியாக செலுத்தப்படுகிறது.
எனவே மீதமுள்ள 6 சதவீதம் தொகை மற்றும் மத்திய அரசிடம் இருந்து பெறப்படும் வரிப் பகிர்வு என 45 ஆயிரத்து 6 கோடி ரூபாய் மட்டுமே தமிழக மக்களுக்கான அனைத்து வகை திட்டங்களுக்கும் செலவழிக்கப்படுகிறது.
இந்த சூழலை நன்கு உணர்ந்து கொண்டும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவது பொதுமக்களை கொதிப்படையச் செய்துள்ளது.
இதைவிட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் சம்பளத்தை கேட்டால், பாமர மக்களுக்கு தலை சுற்றி விடும்.
இடைநிலை ஆசிரியர்கள் மாத சம்பளமாக 48 ஆயிரத்து 423 ரூபாய் பெறுகின்றனர்.
தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாத சம்பளமாக 63 ஆயிரத்து 638 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் மாதந்தோறும் 83 ஆயிரத்து 85 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாதந்தோறும் 83 ஆயிரத்து 635 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மாதம் 1 லட்சத்து 685 ரூபாய் சம்பளம் பெறுகின்றனர்.
இவ்வளவு சம்பளம் பெற்றும் போதவில்லை என போராடுவது வேதனை அளிப்பதாகவும், அந்த பணியை தங்களுக்கு அளித்தால், ஓய்வூதியமே இன்றி பணியாற்ற தயாராக இருப்பதாகவும், அரசுக்கு எதிராக போராட மாட்டோம் என உறுதி அளிக்கத் தயார் என்றும் பி.எட் பட்டதாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த போராட்டத்திற்கு பின்புலமாக திமுக போன்ற அரசியல் கட்சிகள் செயல்படுவதாகவும், மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த போராட்டத்தால், ஏழை, எளிய மாணவர்களின் கல்வி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் வேதனை தெரிவித்திருந்தார்.
அரசு பணியை புனிதமாக கருதாமல், ஆதாயத்திற்காக பள்ளிகளை புறக்கணிப்பதை பார்க்கும் போது, அரசு பணியை சேவை என கருதாமல், பணம் காய்க்கும் மரமாக சிலர் நினைக்கின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது….