நாட்டுக்கோழி முட்டை ஒரிஜினல்தானா? – திக்குமுக்காட வைக்கும் வியாபாரிகள்!

கோழியிலிருந்து முட்டை வந்ததா, முட்டையிலிருந்து கோழி வந்ததா என்கிற வாதம் இன்னும் முடியாதநிலையில், நாட்டுக்கோழியென விற்கப்படுவது உண்மையான நாட்டுக்கோழி முட்டைதானா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. சேலத்தில் சாதாரண முட்டைகளை நாட்டுக்கோழி முட்டையெனக் கூறி சிலர் அதிக விலைக்கு விற்றுவருகின்றனர். இது குறித்து நம் செய்திக்குழுவினரின் கள ஆய்வு தொகுப்பை இங்கே பார்க்கலாம்.

பொதுவாக வெள்ளை லெக்கான் இனத்தைச் சேர்ந்த கோழிகள் வெள்ளை முட்டைகளையும், செந்நிற கொண்டைகள் கொண்ட அமெரிக்கன், இங்கிலீஷ், ஏசியன் கோழியின வகைகள் அடர்பழுப்பு நிற முட்டைகளையும் இடுகின்றன. நாட்டுக்கோழிகள் இவற்றிலிருந்து மாறுபட்டு சற்று பழுப்புநிறமான வெள்ளை முட்டைகளை இடுபவை…

சாதாரண வெள்ளை, பிரவுன் முட்டைகளை காட்டிலும், நாட்டுக்கோழி முட்டையில்தான் அதிகப்படியான சத்து இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இதனால் நாட்டுக்கோழி முட்டை என்ற போர்வையில் பிரௌன் லேயர் கோழி முட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்து சிலர் லாபம் ஈட்டுகின்றனர்.

சேலத்தில் இது போன்ற பிரவுன் நிற முட்டைகளை நாட்டுக் கோழி முட்டைகள் எனக் கூறி 10 ரூபாய் முதல் 15 ரூபாய்வரை மக்களிடம் விற்பனை செய்துவருவதாக நம் செய்திக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து நம் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று கள ஆய்வில் ஈடுபட்டனர்.

பொதுவாக நாட்டுக்கோழி முட்டை அளவில் சிறியதாகவும், 30 முதல் 35 கிராம் எடை கொண்டதாகவும் இருக்கும். ஆனால் சேலத்தில் உள்ள குறிப்பிட்ட கடையில் விற்கப்படும் முட்டைகள் சாதாரணமாக வெள்ளை முட்டையினுடைய அளவையும், எடையையும் கொண்டிருந்தது. விசாரணையில் பண்ணையில் இருந்து அனுப்பப்படும், பிரவுன் முட்டைகளை நாட்டுக்கோழி முட்டை என ஏமாற்றி, அதிக விலைக்கு மக்களிடம் விற்பனை செய்துவந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொரோனா காலகட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்வரை அனைவரும் நோய் எதிர்ப்பு சக்திக்காக முட்டைகளை அதிக அளவு சாப்பிட்டுவரும் நிலையில், இதைப்போல இலாபத்திற்காக மக்களை ஏமாற்றும் நபர்கள் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

Exit mobile version