அணுக்கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் இல்லை: கூடங்குளம் அணுமின்நிலையம்

கூடங்குளம் அணு மின் நிலையத்தின் 1 மற்றும் 2 அணு உலைகளில் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே அங்கு அமையவுள்ள அணுக்கழிவு மையத்தில் சேமிக்கப்படும் என்று கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமையவுள்ள அணுக்கழிவு மையத்தின் மூலம் மற்ற அணுஉலைக் கழிவுகள் இங்கு சேகரிக்கப்படும் என்றும் இதனால் கதிர்வீச்சு அபாயம் ஏற்படும் என்றும் பல்வேறு தரப்பினரும் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் அமையவுள்ள அணுக்கழிவு மையத்தில் மற்ற அணுஉலை கழிவுகள் சேகரிக்கப்படாது என்று கூடங்குளம் அணுமின் நிலையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அணுமின் நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிமுறைகளை பின்பற்றி அதன் வழிகாட்டுதலின் அடிப்படையில் அணுகழிவு மையம் அமைவதாக கூறப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு உலை 1 மற்றும் 2ல் பயன்படுத்தப்பட்ட எரிபொருள் மட்டுமே இங்கு சேகரிக்கப்படும் என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு சேகரிக்கப்படும் அணுக்கழிவுகள் எதிர்காலத்தில் மற்ற உபயோகங்களுக்கு பயன்படுத்தப்படலாம் என்றும், அணு கழிவுகளால் கதிர்வீச்சு அபாயம் இல்லை என்றும் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மேலும் 2 பகுதிகளில் அணுக்கழிவு மையம் அமையவுள்ளதாகவும், இவற்றால், நிலம், நீர் மாசுப்படாது என்றும் கூடங்குளம் அணுமின் நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version