ஊரடங்கு நாட்களில் வீட்டிலேயே முடங்கி கிடக்கும் குழந்தைகள் முன் தொலைபேசிகளை அதிகம் பயன்படுத்துவதை பெற்றோர்கள் தவிர்ப்பது அவசியம் என்று மன நல ஆலோசகர்கள் கூறுகின்றனர். பெற்றோர்கள் குழந்தைகளின் முன்பாக எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்பதை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு…
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 மாதத்திற்கு மேலாக ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பெரியவர்கள் முதல் சிறுவர்கள் வரை வெளியே செல்ல முடியாமல் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் தவிக்கும் குழந்தைகள், பெற்றோர் வைத்திருக்கும் செல்போன்களில் ஆர்வம் செலுத்தி விடுகின்றனர். இது போன்ற சூழலில் தான் கடலூரைச் சேர்ந்த 14 வயது சிறுவன், செல்போன் வாங்கி தரவில்லை என்ற ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்தான். சிறுவன் தற்கொலை பேசுபொருளான நிலையில், இது குறித்து நியூஸ் ஜெ. செய்திகளுக்கு பேட்டியளித்த மன நல ஆலோசகர் ஹேமா கார்த்திக், குழந்தைகளின் தேவையை புரிந்து கொண்டு, அதற்கேற்றவாறு பெற்றோர் செயல்பட வேண்டும் என்று கூறுகிறார்.
ஊரடங்கு நாட்களில் குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி கிடப்பதால், பிள்ளைகளுடன் பெற்றோர் அதிக நேரத்தை செல்விடுவது அவசியமானது என்றும் மனநல ஆலோசகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் முன்பு செல்போன்கள் பயன்படுத்துவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
செல்போன் கேட்டு, வாங்கி தராத ஏக்கத்தில் கடந்த ஆண்டு கேரளாவில் மட்டும் 14 வயதுக்குட்பட்ட 60 சிறுவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆய்வறிக்கை ஒன்று அதிர்ச்சித்தகவலை கூறுகிறது. நாம் என்ன செய்கிறோமோ, அதையே குழந்தைகளும் செய்ய முற்படுவார்கள் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது என்பதே மனநல ஆலேசகர்களின் கருத்து……..