குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டவர்களை அவதூறாக பேச வேண்டாம் என்று எதிர்கட்சிகளுக்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரச்சாரங்களில் தனிநபர் மீதான தாக்குதல்களும் ஆங்காங்கே இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட உயர் பதவிகளை வகிப்போர் மீது அவதூறான வார்த்தைகளை உபயோகிக்க வேண்டாம் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வலியுறுத்தியுள்ளார். அண்மையில் பிரதமர் மோடி மீது காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சியினர் கடும் வார்த்தைகளால் தனிநபர் தாக்குதலில் ஈடுபட்டதை சுட்டிக்காட்டிய அவர், குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றோரின் மாண்புகளை அரசியல் துவேஷம் அழித்துவிடக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் மாற்றுக் கட்சியினராக இருந்தாலும் கூட எந்த ஒரு பிரதமர் மீதும் தாம் வசை பாடியது கிடையாது என்றும் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.