பேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது : வைகோவிற்கு நீதிமன்றம் அறிவுரை

பேச்சுரிமை உள்ளது என்பதற்காக எதை வேண்டுமானாலும் பேசலாம் என்று அர்த்தமில்லை என வைகோவிற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது. வைகோ மீதான தேச துரோக வழக்கில், அவருக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், தண்டனையை எதிர்த்து வைகோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீட்டு வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வைகோ தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கு முடியும் வரை, அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்க உத்தரவிட்ட நீதிபதி, பேச்சுரிமை உள்ளது என்பதற்காக வரம்பு மீறி பேச கூடாது எனவும், பேசுவதற்கு முன் ஒரு முறைக்கு இரு முறை யோசித்து பேசுமாறு வைகோ விடம் அறிவுறுத்துமாறு அவரது வழக்கறிஞரிடம் தெரிவித்தார்.

அதோடு, வைகோ பொறுப்புணர்ந்து பேச வேண்டும் எனவும், தேசிய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் வகையிலான பேச்சுகளை தவிர்க்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி, வழக்கு விசாரணையை 4 வாரத்திற்கு ஒத்தி வைத்தார்.

Exit mobile version