கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சானமாவு வனப்பகுதியில் 15 காட்டு யானைகள் சுற்றி வருவதால் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டாவிலிருந்து காட்டு யானைகள் தமிழக எல்லை வனப் பகுதிகளுக்கு அவ்வப்போது வந்து விடுகின்றன. இவ்வாறு வரும் யானைகள், விவசாய நிலங்களை அதிகளவில் சேதப்படுத்துகின்றன. யானைகள் தாக்கி விவசாயிகள், பொதுமக்கள் உயிரிழப்பதும் வாடிக்கையாக உள்ளது.
இந்நிலையில், 15 யானைகள் இரண்டு குழுக்களாக பிரிந்து சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளன. இதனால் விவசாயிகள் பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர். பீர்ஜேப்பள்ளி, ராமாபுரம், போடூர், ஆழியாளம், பாத்தக்கோட்டா உள்ளிட்ட கிராம மக்கள் ஆடு, மாடு மேய்ச்சலுக்காக வனப் பகுதிக்கு செல்ல வேண்டாம் என்றும், இரவுநேர பயணங்களை தவிர்த்து வீட்டின் முன்பக்க விளக்குகளை தொடர்ந்து எரிய விடவும் வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.