தஞ்சை பெரிய கோயிலில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமனற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. தஞ்சை பெரிய கோயிலில் ”வாழும் கலை” அமைப்பின் தியான நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க வேண்டும் என்று கும்பகோணத்தை சேர்ந்த வெங்கட் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சசிதரன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, தஞ்சை பெரிய கோயிலின் பழமை மற்றும் பாரம்பரியத்தை காக்க வேண்டும் என்றும், கோயில் வளாகத்தில் தனியார் நிகழ்ச்சிகள் நடத்த அனுமதிக்கக்கூடாது என்று உத்தரவிட்டனர்.
தொல்லியல் நினைவு சின்னங்களுக்கு எவ்வித பாதிப்பும் நிகழாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள், அங்கீகரிக்கப்பட்ட நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் தொடர்பான நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கவேண்டும் என்றும், அனுமதி வழங்கினாலும், கோவில் சம்பிரதாயபடி நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதை உறுதி செய்யவேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.