டி.என்.ஏ. ஆய்வின் மூலம் டென்னிசோவன் மனிதனின் உருவம்: இஸ்ரேல் விஞ்ஞானிகள் சாதனை

50 ஆயிரம் ஆண்டுகள் முன்பு உலகில் வாழ்ந்த மனித இனங்களில் ஒன்றான டெனிசோவன்களின் முகம் எப்படி இருந்திருக்கும்? – என நவீன அறிவியல் யுகத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

பரிணாம வளர்ச்சியில்  இப்போதுள்ள மனிதர்கள் தோன்றுவதற்கு முன்பாக, கற்காலத்தில் பல மனித இனங்கள் புவியில் வாழ்ந்தன. அந்த இனங்கள் தங்களுக்குள் இணைந்தும் சண்டையிட்டும் வாழ்ந்து வந்தன. அவர்களின் எச்சங்கள் உலகின் தொடர்ந்து கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.

இவர்களில், ஆப்ரிக்காவில் வாழ்ந்தவர்கள் ஹோமோ சேப்பியன்ஸ் எனவும், யுரேசியாவில் வாழ்ந்தவர்கள் நியாண்டர்தால் எனவும், சீனாவில் வாழ்ந்தவர்கள் பீகிங் மனிதர்கள் எனவும் அறிவியலாளர்களால் பெயரிடப்பட்டு உள்ளனர். இவர்களின் வரிசையில் ரஷ்யாவில் வாழ்ந்தவர்களே டெனிசோவன்கள் ஆவர். 50 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இவர்கள் வாழ்ந்த குகை ஒன்று ரஷ்யாவின் டெனிசோவாவில் கண்டுபிடிக்கப்பட்டதால்தான் இவர்களுக்கு டெனிசோவன் என்ற பெயரே வந்தது. 

நியாண்டர்தால், ஹோமோ சேப்பியன்ஸ் – ஆகிய மனிதர்களின் முழுமையான மண்டை ஓடுகள், எலும்புகள் ஆய்வாளர்களுக்குகு கிடைத்ததால் அவர்களின் தோற்றத்தை ஆய்வாளர்களால் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனால் டெனிசோவன்களின் அனைத்து எலும்புகளும் கிடைக்கவில்லை. ஒரேஒரு சுண்டுவிரல் எலும்பு, 3 பற்கள், ஒரு கீழ்த்தாடை எலும்பு – ஆகியவை மட்டுமே ஆய்வாளர்களுக்குக் கிடைத்தன. இதனால் டெனிசோவன் மனிதர்களின் தோற்றம் எப்படி இருக்கும் என்பது அறிவியல் உலகுக்குப் புரியாத புதிராகவே இருந்து வந்தது.இந்நிலையில், இதுவரையிலான ஆய்வுகளில் கிடைத்த டெனிசோவன்களின் எலும்புகளில் உள்ள டி.என்.ஏ.க்களை அடிப்படையாகக் கொண்டு அவர்களின் மண்டை ஓட்டின் அமைப்பைக் கணித்து, அதன் மூலம் டெனிசோவா குகையில் வாழ்ந்த அந்த டெனிசோவன் பெண்ணின் உருவ ஓவியத்தை இஸ்ரேல் நாட்டின் ஹீப்ரு பல்கலைக் கழக  அறிவியலாளர்கள் உருவாக்கி உள்ளனர்.

டெனிசோவன்களின் இந்த உருவப்படத்தின் மூலம், இவர்கள் தங்களின் சம காலத்தைச் சேர்ந்தவர்களான நியாண்டர்தால் மனிதர்களிடம் இருந்து 56 உடக் கூறுகளில் வேறுபட்டு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. 

மேலும், பண்டைய மனிதர்களின் மண்டை ஓட்டின் அகலம் அவர்களின் மூளை வளர்ச்சியைக் காட்டக் கூடியது என்ற நிலையில், டெனிசோவன்களின் மண்டையோடு நியாண்டர்தால் மனிதர்கள் மற்றும் இன்றைய நவீன மனிதர்களின் மண்டை ஓடுகளை விடவும் அகலமாக இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. 

இன்றைய மனிதர்களான நாம் ஹோமோ சேப்பியன்ஸ் இனத்தையே அடிப்படையாகக் கொண்டவர்கள். ஹோமோ சேப்பியன்ஸ் மனிதர்களைவிடவும் நியாண்டர்தால்கள் மற்றும் டெனிசோவன் மனிதர்கள் பெரிய மூளையோடு இருந்துள்ளனர். அப்படி இருந்தும் நமது முன்னோடிகளான ஹோமோ சேப்பியன்ஸ்கள் எப்படி நிலைத்து வாழ்ந்தார்கள்? – என்ற கேள்வியை இந்த ஆய்வு அறிவியல் உலகத்தில் எழுப்பி உள்ளது.

Exit mobile version