திமுக முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி கொலை வழக்கில் திமுக ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளர் சீனியம்மாளின் மகன் கார்த்திகேயன் கைது செய்யப்பட்டு உள்ளார். திமுகவினர் சொந்தக் கட்சியினரைக் கொல்வதும் கொலை வழக்குகளில் கைதாவதும் இது முதன்முறை அல்ல. திமுகவின் குற்ற வரலாறு மிக நீண்டது…
1971…
அப்போதைய முதலமைச்சர் கருணாநிதிக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியபோது, தகுதியற்றவருக்கு டாக்டர் பட்டமா என கேள்வி எழுப்பிய மாணவர் உதயகுமாரின் கதி என்னவானது என்பது இன்றைய தலைமுறைக்கு தெரிய வாய்ப்பில்லை. கருணாநிதிக்கு எதிராக மாணவர்கள் நடத்திய போராட்டத்துக்குள் ஒருபுறம் காவல்துறை புகுந்த போது, மறுபுறம் குண்டர் படை ஒன்று உதயகுமாரின் கதையை முடித்தது. இந்தக் கொலையை விசாரிக்க, என்.எஸ்.ராமசாமி தலைமையில் அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையம் அறிக்கை கொடுத்தும், கருணாநிதியோ, திமுகவினரோ இவ்வழக்கில் தண்டிக்கப்படவில்லை.
2001…
1996 முதல் 2001வரையிலான திமுக ஆட்சியில், மு.க.ஸ்டாலினுக்கு நெருக்கமாக இருந்தவர், அண்ணாநகர் ரமேஷ். ஸ்டாலின் தனது ஊழல்களை ரமேஷ் மூலமாகவே நடத்தியதாகவும் கூறப்பட்டது. அதிமுக ஆட்சிக்கு வந்ததும், ரமேஷ் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க முயன்றபோது, அவர் மாயமானார். 2001 ஆம் ஆண்டு மே 28 ஆம் தேதி, ரமேஷ், அவரது மனைவி, மற்றும் 3 குழந்தைகளின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. ரமேஷ் தற்கொலை செய்து கொண்டதாக திமுக கூறினாலும், அதற்கான காரணங்களைக் கூற முடியவில்லை. அன்றைய தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்கள், ’அண்ணாநகர் ரமேஷின் இறப்பு தற்கொலை அல்ல கொலை’ என்று சட்டப்பேரவையிலேயே கூறினார். இருப்பினும் உரிய ஆதாரங்கள் கிடைப்பதில் ஏற்பட்ட காலதாமதம், ஆட்சி மாற்றம் போன்றவற்றால், ஸ்டாலின் தண்டனை பெறாமல் தப்பினார்.
2003…
திமுககாரரும், கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தவருமான தா.கிருஷ்ணன் 2003ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். இவ்வழக்கில் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, மதுரை முன்னாள் துணை மேயர் மன்னன் உள்ளிட்ட 13 பேர் கைதாகினர். பின்னர் இவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். இதுமட்டுமல்ல, திமுக குடும்பச் சண்டையில், தினகரன் பத்திரிக்கையில் பணியாற்றிய அப்பாவி ஊழியர்கள் 3 பேர் உயிரிழந்ததும், மறக்க முடியாத துயரச் சம்பவம். இந்தச் சம்பவத்திற்கு மூல காரணமாக இருந்த அழகிரி, அந்த குற்றத்திற்காக ஒரு நாள் கூட சிறையில் அடைக்கப்படவில்லை.
2011…
முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசாவின் நெருங்கிய நண்பர் சாதிக் பாட்ஷா. 2ஜி சர்ச்சை உச்சத்தில் இருந்த 2011ம் ஆண்டின் மே 16ஆம் தேதி சாதிக் பாட்சாவின் உடல் தூக்கில் தொங்கிய நிலையில், அவரது இல்லத்தில் கண்டெடுக்கப்பட்டது. அவர் இறப்பு தற்கொலை என்றால் அதற்கான காரணம் என்ன? கொலை என்றால் கொன்றவர் யார்? எந்த ரகசியத்தை மறைக்க அவரது வாய் நிரந்தரமாக மூடப்பட்டது? – என்ற கேள்விகள் அப்போது எழுந்தன. இந்த வழக்கிலும் உரிய சாட்சியங்கள் இல்லாததால் திமுக தப்பியது.
2012…
முன்னாள் அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ராமஜெயம் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் திருச்சியை உலுக்கியது. ராமஜெயத்தின் மீது பல்வேறு புகார்கள் இருந்த நிலையில், உட்கட்சி பிரச்னை காரணமாக கொல்லப்பட்டாரா? – என்ற சந்தேகமும் நிலவுகிறது.
2013…
திமுக பிரமுகரும் அழகிரியின் தீவிர ஆதரவாளருமான பொட்டு சுரேஷ், அழகிரியின் ஆதரவாளர்களாலேயே கொடூரமாக கொல்லப்பட்டார். இந்த வழக்கில் அழகிரியின் மற்றொரு தீவிர ஆதரவாளரான அட்டாக் பாண்டி முக்கிய குற்றவாளி என்பது குறிப்பிடத்தக்கது.
சொந்தக் கட்சிக்காரர்களையே கொலை செய்வது, தொண்டர்களை பொதுவெளியில் அடிப்பது என்று – திமுகவின் கருப்பு வரலாற்றில் மற்றுமொரு அத்தியாயம்தான் உமா மகேஸ்வரியின் கொலை.