நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற்றதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.
கைத்தறி மற்றும் துணிநூல்துறை, கதர், கிராமத் தொழில்கள் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் சுந்தர், நாடாளுமன்ற தேர்தல் வெற்றி, தோல்வியை பற்றி பேரவையில் பேசி நேரத்தை வீணடித்தார். அவருக்கு பதிலடி கொடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் டெபாசிட் இழந்த திமுக, நாடாளுமன்ற தேர்தலில் நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை அள்ளிவீசி மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றதாக கூறினார். வரும் தேர்தல்களில் உண்மையான வெற்றியை மக்கள் அதிமுகவுக்கு வழங்குவார்கள் என்று முதலமைச்சர் பேரவையில் கூறினார்.
திமுகவுக்கு பதிலடி கொடுத்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், தமிழக அரசியல் வரலாற்றில் அதிக தோல்விகளை சந்தித்த கட்சி திமுக என்றார். எதிர்காலத்தில் தமிழகத்தை ஆளப்போகும் கட்சி அதிமுக என்றும் அமைச்சர் உறுதியாக தெரிவித்தார்.