வேலூரில் திமுக பிரமுகரிடமிருந்து கணக்கில் காட்டாத ரூ.27,76,000 பறிமுதல்

வேலூர் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட திமுக பிரமுகரிடமிருந்து கணக்கில் காட்டாத 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். வேலூர் மக்களவைத் தொகுதிக்கு ஆகஸ்டு 5ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தநிலையில், வேலூரை அடுத்த புதுவசூர் பகுதியைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலை என்பவருக்குச் சொந்தமான வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் 10 பேரும், தேர்தல் கண்காணிப்பு குழு அதிகாரிகளும் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அதிகாரிகள் வீட்டிற்குள் நுழையும் போது, வீட்டில் இருந்தவர்கள் வெளியில் தூக்கி வீசிய கட்டைப்பையில் 27 லட்சத்து 76 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலையிடம் பணம் வந்த வழி, வங்கி கணக்குகள், மற்றும் ஆவணங்களை காண்பிக்கும் படி அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

சுமார் 6 மணிநேரம் நடைபெற்ற இந்த வருமானவரித்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட பணம் ஆகியவை,வட்டார அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டன. முன்னதாக ரியல் எஸ்டேட் அதிபர் ஏழுமலை காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி, தற்போது தி.மு.கவில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version