வாக்காளர்களுக்கு விநியோகம் செய்ய பணம் வைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறையினர் மற்றும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி, 10 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் ஆவணங்களை கைப்பற்றியுள்ளனர்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள காந்தி நகர் பகுதியில், திமுக பொருளாளர் துரைமுருகன் மற்றும் அவரது மகனும், வேலூர் மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளருமான கதிர் ஆனந்தின் வீட்டில், வருமான வரித்துறை அதிகாரிகள் குழு மற்றும் தேர்தல் செலவினப் பார்வையாளர் குழுவினர், சோதனை நடத்தினர். இரவு அதிகாரிகள் சென்ற போது, அவர்களுடன் திமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், அதிகாலையில் அதிகாரிகள் சோதனையை தொடங்கினர். மேலும், துரைமுருகனுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களிலும் வருமான வரித்துறை, தேர்தல் அதிகாரிகள் சோதனை நடத்தினர். நீண்ட நேரம் அதிகாரிகள் ஆய்வில் ஈடுபட்டனர். வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக பணம் வைத்திருந்ததாக எழுந்த புகாரையடுத்து, இந்த சோதனை நடைபெற்றது. கதிர் ஆனந்த் வெற்றி பெற்றால், தொகுதிக்கு 50 லட்சம் ரூபாய் நிதி வழங்குவதாக துரைமுருகன் தெரிவித்ததாக கூறப்படும் தகவலாலும், இந்த சோதனை நடைபெற்றுள்ளது. இந்த அதிரடி சோதனையில், துரைமுருகன் வீட்டிலிருந்து, 10 லட்சம் ரூபாய் ரொக்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். அதோடு, 3 சூட்கேஸ்களில் முக்கிய ஆவணங்களையும் அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.