பாரத் நெட் திட்டத்தை குறைசொல்லி மக்களை திசை திருப்ப தி.மு.க. முயற்சி

தமிழக அரசின் மீது ஏதாவது குறைசொல்லி, அரசியல் செய்கிறோம் என்பதை தி.மு.க. வெளிக்காட்டிக் கொள்வதாக, தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமிக்கு, அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், பாரத் நெட் டெண்டர் சம்பந்தமாக, ஒப்பந்தப் புள்ளிக்கு முந்தைய கூட்டம் கூட நடத்தப்படாத நிலையில், தவறு நடந்துவிட்டதாக பொய்யான குற்றச்சாட்டுகளை தி.மு.க. கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். ஊரக மக்களும் தொழில்நுட்பத் திறனில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற லட்சியத்தில் கொண்டு வரப்படும் இந்த திட்டத்தை தேவையின்றி குறைசொல்லி மக்களை திசை திருப்ப திமுக  முயற்சிப்பதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார். இதன்மூலம், தமிழகத்தின் முன்னேற்றத்திற்கு தி.மு.க. தடைக்கல்லாக இருக்கக் கூடாது என அமைச்சர் தெரிவித்துள்ளார். ஐ.பெரியசாமி, வீட்டு வசதித்துறை அமைச்சராக இருந்தபோது விதிகளை மீறி வீடுகளை ஒதுக்கியது தொடர்பான வழக்குகள் இன்னும் ஊழல் தடுப்புப் பிரிவின் விசாரணையில் உள்ளதை அமைச்சர் நினைவுகூர்ந்துள்ளார். பாரத் நெட் திட்டத்தை செயல்படுத்த அரசு எடுத்து வரும் முயற்சியை, முகாந்திரம் இல்லாமல் சிபிஐ விசாரணைக்கு விடத் தயாரா என கேள்வி கேட்பது ஐ.பெரியசாமியின் அறியாமையை காட்டுகிறது என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி கொடுத்துள்ளார்.

Exit mobile version