முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, முதன்முதலில் அம்மா மினி கிளினிக்கை, சென்னையில் தொடங்கி வைத்த போது அமைக்கப்பட்ட கல்வெட்டு உள்ளிட்ட, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பெயர் இடம்பெற்றிருந்த பல கல்வெட்டுகளை, இரவோடு இரவாக திமுகவினர் அகற்றியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சியில் இல்லாத போதே அராஜகங்களில் ஈடுபட்டு வந்த திமுகவினர், தற்போது ஆட்சிக்கு வந்துள்ளதால், அராஜக செயல்களை கட்டவிழ்த்து விட்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் அம்மா உணவகங்களை திமுகவினர் சேதப்படுத்திய விவகாரத்தில், பல்வேறு தரப்பில் இருந்தும் கடும் கண்டனங்கள் எழுந்தன. இந்த நிலையில், அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களுக்கான கல்வெட்டுகளை இரவோடு இரவாக அகற்றும் செயல்களில் திமுகவினர் ஈடுபட தொடங்கி விட்டனர். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் கடந்த ஆட்சியில் தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டன. சென்னை ராயபுரம் தொகுதியில் முதல் அம்மா மினி கிளினிக்கை, அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இதற்காக வைக்கப்பட்ட கல்வெட்டை திமுகவினர் இரவோடு இரவோடு பெயர்த்து எடுத்துள்ளதாக அப்பகுதியினர் குற்றம் சாட்டுகின்றனர்.
இதேபோல், ராயபுரம் மக்களின் குடிநீர் தேவைக்காக தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டு திறக்கப்பட்ட கல்வெட்டையும் திமுகவினர் இரவோடு இரவாக இடித்து தள்ளி, அட்டூழியத்தில் ஈடுபட்டுள்ளனர். ராயபுரம் எஸ்.என்.செட்டி தெரு, ஷேக் மேஸ்திரி தெரு, ஜி.எம்.பேட்டை தெரு, அம்மன் கோயில் தெரு உள்ளிட்ட இடங்களில் திட்டங்களை நிறைவேற்றிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் பெயர் இருந்த கல்வெட்டுகள், மற்றும் அங்கே போடப்பட்டிருந்த தண்ணீர் குழாய்களை திமுகவினர் அடித்து உடைத்துவிட்டதாக அப்பகுதியினர், வேதனையுடன் குற்றம்சாட்டியுள்ளனர்.
கல்வெட்டுக்களை உடைத்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் மீது காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராயபுரம் மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தங்களின் ஆட்சியில் புதிய திட்டங்களை மக்களுக்காகச் செயல்படுத்தி, கல்வெட்டு பதிப்பதை விட்டுவிட்டு, முந்தைய ஆட்சியில் செயல்படுத்திய திட்டங்களுக்கான கல்வெட்டுகளை அகற்றுவதும், உடைப்பதும் கீழ்த்தரமான அரசியல் என்று சமூக ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.