திமுக மு.க.ஸ்டாலின் மீது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கண்டித்து அறிவிக்கை

கழக அரசின் சாதனைகளை கண்டு பொறாமை தீயில் வெந்து போயிருக்கும் மு.க.ஸ்டாலின், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது வெறுப்பை அள்ளி வீசுவதை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வன்மையாக கண்டித்துள்ளார்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய மாநிலங்கள் அனைத்தோடும் ஒப்பிடுகையில், ஆளுமைத் திறனில் தமிழ்நாடு முதலிடம் பெற்ற மாநிலமாக விளங்குவதாக, மத்திய அரசு நடத்தியிருக்கும் ஆய்வின் முடிவுகள் பாராட்டியிருப்பதை கண்டு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொறாமைத் தீயில் வெந்து கொண்டிருக்கிறார் என தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீதும் தமிழக அரசு மீதும் அவர் கொண்டிருக்கும் காழ்ப்புணர்ச்சியின் வெளிப்பாடாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளார். அரசியல் வானில் எத்தனை அடைமழை, புயல் வீசினாலும் அசைக்க முடியாத ஆலமரமாக, கொள்கைவழி வந்த வீரர்களின் வெற்றிப்படையாக அதிமுக பீடுநடை போட்டு  வருவதை ஸ்டாலினால் தாங்கிக் கொள்ள முடியவில்லை என தெரிவித்துள்ளார். முதலமைச்சரின் எளிமை, பண்பு, அரசியல் வெற்றிகள் ஆகியவற்றை சிறுபிள்ளைத்தனமாகவும் பொறுப்பற்ற முறையிலும் வெறுப்பை உமிழ்ந்து அறிக்கை வெளியிட்டிருக்கிறார் என்று கூறியுள்ளார். ஸ்டாலின் அரசின் அறிக்கைகளை படிப்பதில்லை என்றும், நடுநிலையான புள்ளிவிவரங்களை புரிந்து கொள்வதில்லை என்றும் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று எதையும் ஒரு பொறுப்பற்ற பார்வையோடு அணுகும் மனநிலையில் ஸ்டாலின் இருப்பது கண்டிக்கத்தக்கது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version