திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதிக்கு உயர் நீதிமன்றம் அறிவுரை!

பட்டியலின மக்கள் குறித்தும், உயர்நீதிமன்ற நீதிபதிகள் குறித்தும் அவதூறு கருத்து தெரிவித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர். எஸ் பாரதிக்கு அறிவுரை வழங்கியுள்ள உயர் நீதிமன்றம், பொது வெளியில் பேசும் போது வார்த்தைகளில் கவனம் தேவை எனவும் தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்.எஸ் பாரதி, பட்டியலினத்தவருக்கு எதிராக பேசியது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இது தொடர்பாக ஆதி தமிழர் மக்கள் கட்சி அளித்த புகாரின் அடிப்படையில், ஆர்.எஸ் பாரதி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கில், கடந்த 23ம் தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் , நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது. இந்த ஜாமீனை ரத்து செய்யக் கோரி மத்திய குற்றப் பிரிவு தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு, விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் பிரபாகரன், பட்டியலின மக்களை களங்கப்படுத்தியதாக கூறி, ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்ய வேண்டுமென வாதிட்டார். இதை தொடர்ந்து, ஆர்.எஸ்.பாரதியின் ஜாமீனை ரத்து செய்யக் கோரிய காவல்துறையின் மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல், நீதிபதி தள்ளி வைத்தார்.  ஆர்.எஸ் பாரதியின் பேச்சு, சிபாரிசு இருந்தால் யாரும் நீதிபதி ஆகிவிடலாம் என்பதைப் போல் உள்ளதாகவும், பொது வெளியில் இவ்வாறு பேசுவது, மக்களுக்கு நீதித்துறையின் மீதுள்ள மாண்பை சீர்குலைத்துவிடும் எனவும், நீதிபதி தெரிவித்தார்.

Exit mobile version