பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பை மீறி, 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. திமுக அரசின் அவசரத்தால், கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ஊரடங்கு தளர்வில் டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க தமிழ்நாடு அரசு அனுமதி அளித்ததற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடைகளை திறந்தால், கொரோனா தொற்று மேலும் பரவ வழிவகுக்கும் என தெரிவித்தனர். இந்த நிலையில், பல்வேறு தரப்பினரின் எதிர்ப்பையும் மீறி 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் திறக்கப்பட்டு விற்பனை தொடங்கியுள்ளது. சென்னையில் மதுபானக் கடைகள் திறப்பதற்கு முன்பாகவே மதுப்பிரியர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர்.