திமுகவின் பொய் புகார் காரணமாகவே தருமபுரி மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நடைபெற்றதாக பாமக தலைவர் மருத்துவர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் மாதம் 18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், தருமபுரி தொகுதியின் குறிப்பிட்ட 8 வாக்குச்சாவடிகளை பாமகவினர் கைப்பற்றி முறைகேட்டில் ஈடுபட்டதாக திமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தது.
திமுகவுக்கு ஆதரவாக இந்தக் கருத்தை வெளியிட்டு அவதூறு செய்தி பரப்பப்பட்டதாக ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.
அந்த 8 வாக்கு சாவடிகளுக்கும் மே 19ம் தேதி நடத்தப்பட்ட மறுவாக்குப்பதிவில், ஏப்ரல் 18 ஆம் தேதி பதிவான வாக்குகளை விட 38 வாக்குகளே குறைவாக பதிவாகின. பூஜ்யம் புள்ளி 23 சதவீதம் மட்டுமே வாக்குப்பதிவு குறைந்துள்ளது.
இதன்மூலம் திமுக பொய் புகாரை அளித்துள்ளது என்பது நிரூபணம் ஆகியுள்ளதாக குறிப்பிட்டார். பாமக வாக்குச் சாவடிகளைக் கைப்பற்றியதாக திமுக அளித்த புகார் உண்மையாக இருந்திருந்தால் மறுவாக்குப் பதிவில் வாக்கு சதவீதம் பெருமளவில் குறைந்திருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். திமுகவின் பொய் புகாரினால் 8 வாக்குச் சாவடிகளுக்கு வீணாக மறுவாக்குப் பதிவு நடைபெற்றிருப்பதாகவும், இதற்காக திமுக மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
Discussion about this post