திமுகவின் தேர்தல் அறிக்கை பொய்யானது என்று, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தொப்பூரில் வாக்கு சேகரித்த முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார். மத்தியில் மோடி தலைமையில் நிலையான ஆட்சி அவசியம் என்று அவர் கூறினார்.
தர்மபுரி மாவட்டம், தொப்பூரில் பா.ம.க வேட்பாளர் அன்புமணி ராமதாஸை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி வாக்கு சேகரித்தார். வழியெங்கும் அதிமுக மற்றும் கூட்டணி கட்சித் தொண்டர்கள் முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்தியாவிலேயே எளிமையான முதலமைச்சர் பழனிசாமி என்று பாராட்டு தெரிவித்த அன்புமணி ராமதாஸ், அதிமுக தலைமையிலான கூட்டணி 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற மக்கள் வாக்களிக்க வேண்டும் என்றார். பாப்பிரெட்டி தொகுதி இடைத்தேர்தலில் களமிறங்கும் அதிமுக வேட்பாளர் கோவிந்தசாமிக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.