சென்னையில் வாகன சோதனையில் ஈடுபட்ட காவலர்களை திமுகவினர் தாக்கி மிரட்டிய சம்பவம், காவலர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ஐ.சி.எஃப்பில் உள்ள கான்ஸ்டபிள் சாலை பகுதியில், உதவி ஆய்வாளர் முருகன் உள்பட 4 போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவ்வழியே இருசக்கரவாகனத்தில் வந்த திமுகவைச் சேர்ந்த வாசு என்பவரை நிறுத்தி விசாரித்துள்ளனர்.போலீஸாரிடம் அத்துமீறி பேசிய அவர், தனக்கு ஆதரவாக சென்னை கிழக்கு மாவட்ட திமுக இளைஞர் அணி அமைப்பாளர் மகேஷ், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோரை செல்போனில் அழைத்துள்ளார். மூவரும் சேர்ந்து போலீஸாரிடம் தரக்குறைவான வார்த்தைகளால் பேசியதோடு, சம்பவத்தை வீடியோ எடுத்த காவலர் அசோக்கின் செல்போனை தட்டிப் பறித்து சட்டையை இழுத்து தாக்கவும் முனைந்தனர்.
இதுதொடர்பாக ரோந்து வாகன உதவி ஆய்வாளர் சீனிவாசன் வாக்கி டாக்கி மூலமாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு அளித்த தகவலில், அங்கு வந்த உதவி ஆய்வாளர் மகேஷ், திமுக பிரமுகர் மகேஷை போலீஸ் வாகனத்தில் காவல் நிலையம் அழைத்து வர முயற்சித்தபோது 10க்கும் மேற்பட்ட திமுகவினர் திரண்டு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், காவலர்களுக்கு ஏற்பட்ட அனுபவம் அங்கிருந்த பொதுமக்களிடையே திமுகவினர் மீதான அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது.