தொழிலதிபரிடம் மிரட்டி 35 லட்சம் ரூபாய் பணம் பறித்த திமுக சட்டமன்ற உறுப்பினர் சேகர் பாபு மீதான வழக்கை தொடர்ந்து விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது..
சென்னை சூளைமேட்டை சேர்ந்த ராஜ்குமார் ஜெய்ன் என்பவருக்கும், கண்பத்லால் என்பவருக்கும் வியாபாரத்தில் பிரச்னை இருந்து வந்துள்ளது. இருவரும் சமரசம் செய்து கொள்ள முற்பட்ட நிலையில், தன்னை அணுகி கட்டப்பஞ்சாயத்து செய்து கொள்ளாமல், நீங்களாக எப்படி பிரச்சனையை சரி செய்து கொள்ளலாம் என தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு மற்றும் தி.மு.க வழக்கறிஞர்கள் சரவணன் உள்ளிட்டோர் மிரட்டியதாகவும்,தொழில் செய்ய வேண்டுமானால் தங்களுக்கு ஒரு கோடி தர வேண்டுமென மிரட்டி 35 லட்சம் பெற்று கொண்டதோடு, மீண்டும் 65 லட்சம் கேட்டு அச்சுறுத்துவதாக ராஜ்குமார் ஜெயின் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த ஜார்ஜ் டவுன் நீதிமன்றம், சேகர் பாபு உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு யானைக்கவுனி காவல்துறைக்கு உத்தரவிட்டதன் பேரில், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், தங்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி திமுக வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான மாநில தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஏ.நடராஜனின் வாதங்களை ஏற்று, தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் சேகர்பாபு, திமுக வழக்கறிஞர் சரவணன் உள்ளிட்டோர் மீதான விசாரணையை தொடர்ந்து மேற்கொள்ள அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.