திருவொற்றியூரில் நடைபெறும் சாலைப் பணிகளில் கமிஷன் கேட்டு சென்னை மாநகராட்சி உதவிப் பொறியாளரை தாக்கி திமுக எம்.எல்.ஏ கே.பி.சங்கர் அராஜகத்தில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக சாலைப்பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
முன்னாள் மீன்வளத்துறை அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரரான கே.பி.சங்கர் திருவொற்றியூர் தொகுதி திமுக எம்எல்ஏவாகயும், மேற்குப் பகுதி கழக செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில், திருவொற்றியூர் தொகுதியில் உள்ள நடராஜன் கார்டனில் முதல் மூன்று தெருக்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான சாலை பணிகளில், திமுக சட்டமன்ற உறுப்பினரான கே.பி.சங்கர், சுமார் 30 லட்ச ரூபாயை சென்னை மாநகராட்சி உதவி பொறியாளரிடம் கமிஷன் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த தொகையை கேட்டு மிரட்டியும் தராததால், சாலை பணிகளை உடனடியாக நிறுத்துமாறு அங்கிருந்த பணியாளர்களிடம் திமுக எம்எல்ஏ கே.பி.சங்கர் கூறியதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை கேட்டு அங்கு சென்ற மாநகராட்சி உதவி பொறியாளர் பணிகளை நிறுத்த முடியாது என கூறியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த கே.பி.சங்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள், உதவி பொறியாளரை கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது.
இந்த தாக்குதல் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வருவதாக மாநகராட்சியின் வடக்கு மண்டல துணை கண்காணிப்பாளர் பிரபாகரன் கூறியுள்ளார். மாநகராட்சி உதவி பொறியாளர்கள் மீது தாக்குதல் நடத்திய கே.பி.சங்கரின் அராஜக செயலால் திருவொற்றியூர் மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இந்த தாக்குதல் விவகாரம் பூதாரமாக மாறியுள்ள நிலையில், நடவடிக்கை என்ற பெயரில் கண்துடைப்புக்காக திமுக எம்.எல்.ஏ சங்கரிடமிருந்து திருவொற்றியூர் மேற்குப் பகுதி கழக செயலாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
அரசு ஊழியர்களுக்கு எதிரான கட்சியாக திமுக மாறிவரும் நிலையில், அடிப்பதும், மிரட்டுவதுதான் திமுகவினரின் வாடிக்கையா என்றும் பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், கமிஷன்கேட்டது அம்பலமானதும் திமுக எம்.எல்.ஏ மீது நடவடிக்கை எடுத்துள்ள கட்சி நிர்வாகம், பொங்கல் தொகுப்பு முறைகேடு தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்காமல் அடக்கி வாசிப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Discussion about this post