சென்னை சோழிங்கநல்லூரில், வீட்டை அபகரிக்கும் நோக்கில் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில் கொலை மிரட்டல் விடுத்து வரும் ராஜா என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென காவல் ஆணையர் அலுவலகத்தில் பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.
சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை மூன்றாவது குறுக்கு தெருவை சேர்ந்த உஷா அளித்த புகார் மனுவில், திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷின் கார் ஓட்டுநரான ராஜா என்பவர், தங்களது வீட்டை அபகரிக்கும் நோக்கில் அடியாட்களை வைத்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், ராஜா மற்றும் அவரது மனைவி லதா அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வருவதாகவும் புகார் கூறியுள்ளார்.
கடந்தாண்டு நவம்பர் மாதம் திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் அடியாட்களுடன் வந்து நிலத்தை ராஜாவிற்கு கொடுக்கவில்லை என்றால் தாங்களே எடுத்துக் கொள்வோம் என மிரட்டியதாக கூறியுள்ள உஷா,
காவல் நிலையத்தில் பல முறை புகார் தெரிவித்தும், எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்துள்ளார்.
கடந்த 22ம் தேதி, தமது மகள் பாரதியை கொலை செய்ய ராஜா முயற்சித்ததாகவும், கடப்பாரையை கொண்டு வீட்டு சுவரை இடிக்கும் சிசிடிவின் காட்சிகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
திமுக சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷின் தூண்டுதலின் பேரில், கொலை மிரட்டல் விடுத்து வரும் ராஜா, அவருடைய மனைவி லதா, மகன் பிரவீன், மகள் சந்தியா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி உஷா புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.