ராமநாதபுரம் மாவட்டத்தில் திமுக சார்பில் உள்ளாட்சி தேர்தலில் வாக்காளருக்கு வழங்க இருந்த மது பாட்டில்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஆர்.எஸ்.மங்கலம் அருகே களக்குடி கிராமம் பகுதியில் திமுகவைச் சேர்ந்த பிரமுகர் ஒருவர் வாக்காளர்களுக்கு மது பாட்டில்கள் வழங்கி வருவதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து காவல்துறையினர் மேற்கொண்ட ஆய்வில், 400 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மதுபாட்டிகள் கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட காரை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஓட்டுநர் கார்த்தி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த கொடியாலத்தில் சங்கீதா என்ற வேட்பாளரின் உறவினர் வீட்டில், தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அதில் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக வைத்திருந்த ஆயிரத்து 200 பாலிஸ்டர் சேலைகள் சிக்கியது. இதனையடுத்து சேலைகளைப் பறிமுதல் செய்த தேர்தல் பறக்கும் படையினர் அவற்றைத் தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.